கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை. வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு

செய்யாறு அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
செய்யாறு
கல்லூரி மாணவி
செய்யாறு தாலுகா புரிசை கிராமம் கொல்லைமேடு பகுதியைச் சேர்ந்தவர் தாமோதரன், செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரின் மகள் கன்னியம்மாள் (வயது 19). இவர், அனக்காவூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று தாமோதரன் அதிகாலை வழக்கம்போல் வேலைக்குச் சென்று விட்டார். நேற்று முன்தினம் இரவு திருமண நிகழ்ச்சிக்குச் சென்ற அவரின் மனைவியும், மகனும் நேற்று காலை வீடு திரும்பினர். அப்போது வீட்டில் இருந்த கன்னியம்மாளை தேடினர். ஆனால் அவர் வீட்டில் இல்லை. வீட்டுக்கு அருகில் சென்று பார்த்தபோது, ஒரு மரத்தில் கன்னியம்மாள் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பது தெரிய வந்தது.
போனில் பேசிய வாலிபர்
இதுகுறித்து அனக்காவூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் கன்னியப்பன் விரைந்து வந்து, அவரின் பிணத்தை மீட்டு செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.
போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தென்இலுப்பை கிராமத்தைச் சேர்ந்த முருகனின் மகன் சரவணன் என்பவர் அடிக்கடி கன்னியம்மாளிடம் போனில் பேசி வந்ததாகத் தெரிகிறது. அதேபோல் நேற்று காலை போனில் பேசி உள்ளார். அதில் மனமுடைந்த கன்னியம்மாள் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
எனினும், தனது மகள் சாவுக்கு வாலிபர் சரவணன் தான் காரணம், என தாமோதரன் அனக்காவூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, தலைமறைவான வாலிபரை தேடி வருகின்றனர்.
உடலை வாங்க மறுப்பு
இதற்கிடையே, வாலிபரை கைது செய்யக்கோரி கன்னியம்மாளின் குடும்பத்தினரும், உறவினர்களும் உடலை வாங்க மறுத்து, மருத்துவமனை வளாகப் பகுதியில் கூச்சல் எழுப்பியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் செய்யாறு துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் விரைந்து வந்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து அவர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story