பூட்டிய கடையில் பணம்-மின்விசிறி திருட்டு


பூட்டிய கடையில் பணம்-மின்விசிறி திருட்டு
x
தினத்தந்தி 16 Jun 2021 10:01 PM IST (Updated: 16 Jun 2021 10:01 PM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே மின்சாதன பொருட்கள் விற்பனை கடையின் பூட்டை உடைத்து பணம் மற்றும் மின்விசிறியை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

தேனி: 

தேனி அருகே உள்ள பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் கணேசன். இவர் கொடுவிலார்பட்டியில் உள்ள மெயின்ரோட்டில் மின்சாதன பொருட்கள் விற்பனை கடை வைத்துள்ளார். 

நேற்று முன்தினம் கடையை பூட்டிவிட்டு சென்று விட்டார். நேற்று கடையை திறக்க வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. கடைக்குள் சென்று பார்த்த போது ரூ.7 ஆயிரம் மற்றும் 2 மின்விசிறிகள் திருட்டு போயிருந்தது. 


அதுபோல், அந்த கடையில் இருந்து சிறிது தொலைவில் வெங்கடேசன் என்பவருடைய வீடு உள்ளது. அவர் கொடுவிலார்பட்டியில் செங்கல் சூளை வைத்துள்ளார். அவருடைய வீட்டின் கதவிலும் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. ஆனால், வீட்டில் எதுவும் திருடு போகவில்லை. 

இந்த இரு சம்பவங்கள் குறித்தும் தகவல் அறிந்ததும் பழனிசெட்டிபட்டி போலீசார் அங்கு விரைந்து வந்தனர். திருட்டு நடந்த கடையில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் முககவசம், தலைக்கவசம், கையுறை அணிந்த நிலையில் 2 பேர் வந்து இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. 

அதே பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஓய்வு பெற்ற போலீஸ் துணை சூப்பிரண்டு பாரதி என்பவருடைய வீட்டில் நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. 

அதே பகுதியில் மீண்டும் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story