வடிகால் வாய்க்காலை தூர்வாரக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


வடிகால் வாய்க்காலை தூர்வாரக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 Jun 2021 11:39 PM IST (Updated: 16 Jun 2021 11:39 PM IST)
t-max-icont-min-icon

கோட்டூர் அருகே அகரம் களப்பால் வடிகால் வாய்க்காலை தூர்வாரக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோட்டூர்;
கோட்டூர் அருகே அகரம் களப்பால் வடிகால் வாய்க்காலை தூர்வாரக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
300 ஏக்கர் விளைநிலம்
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே தெற்கு நாணலூர் கோரையாற்றிலிருந்து பிரியும் அகரம் களப்பால் பாசன வாய்க்கால் 7 கிலோ மீட்டர் தூரத்துக்கு சென்று புதுபாண்டி ஆற்றில் கலக்கிறது. இந்த வாய்க்கால் மூலம் 300 ஏக்கர் நிலத்தில் சாகுபடி நடைபெறுகிறது. இந்த வாய்க்காலை தூர்வாரி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. 
தற்போது மதகில் பராமரிப்பு இன்றி மதகில் உடைப்பு ஏற்பட்டு பழுதடைந்து உள்ளது. இதனால் சாகுபடிக்கு போதிய தண்ணீர் வரா மல் விவசாயிகள் கஷ்டப்படுகிறார்கள்.. எனவே அகரம்களப்பாள் வாய்க்காலை உடனடியாக தூர்வார வேண்டும். பழுதடைந்த மதகை சீரமைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி  ஒன்றியக் குழு உறுப்பினர்மாரியப்பன் (மா.கம்யூ) தலைமையில் விவசாயிகள் வாய்க்காலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
சாகுபடி பாதிப்பு
அப்போது அவர்கள் கூறியதாவது:-
 அகரம் களப்பால் பாசன வாய்க்கால் 7 கிலோ மீட்டர் தூரத்துக்கு கருவேலமரங்கள், பட்டுபோன மூங்கில் மரங்கள், காட்டாமணக்கு செடிகள் மண்டி வாய்க்கால் தூர்ந்து உள்ளது. மேலும் கஜா புயலில் சாய்ந்த மரங்கள் இன்னும் அகற்றப்படவில்லை. இதனால் மேட்டூர் அணை தண்ணீர் வரும் போது குறுவை சாகுபடிக்கு போதிய அளவு தண்ணீர் வருவதில்லை. இதனால் குறுவை சாகுபடி பாதிக்கப்படுகிறது. 
 மேலும் மழை வெள்ளக் காலத்தில் வேதபுரம், வெங்கத்தான்குடி சிங்கமங்களம், நாராயணபுரம், நடுவகளப்பாள், நல்லநாயகிபுரம் ஆகிய கிராமத்தின் தண்ணீர் முழுவதும் இந்த வாய்க்காலில் வந்து தான் வடி கிறது. எனவே சிறிதளவு மழை பெய்தால் கூட மழைநீர் வந்து சேர்த்து வடிய முடியாமல் தேங்கி நிற்கிறது. 
நஷ்டம்
தண்ணீர் வடிவதற்கு பலநாட்கள் ஆவதால் 300 ஏக்கர் நிலப்பரப்பில் சாகுபடி செய்த நெற்பயிர்கள் அனைத்தும் அழுகிவிடுகிறது இதனால் விவசாயிகளுக்கு பெரிய அளவில்  நஷ்டம் ஏற்படுகிறது. எனவே அகரம்களப்பால் வாய்க்காலை தூர்வார வேண்டும். கோரையாறு மதகை சீரமைக்க வேண்டும் என்று திருத்துறைப் பூண்டி பொதுப் பணித்துறை அதிகாரிகளிடம் நேரில் சென்று மனு கொடுத்தும்  இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. 
தற்போது மேட்டூர் அணை திறந்து விட்டதால் கால அவகாசம் இல்லை என்றால் அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு அகரம்களப்பால் அய்யனார் கோவிலடியிருந்து புதுபாண்டி ஆறு வரை 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு மட்டும் வடிகாலை மட்டுமாவது உடனே தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில் வடிகால் வாய்க்காலை தூர்வாரும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம். 
இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story