சென்னையில் இருந்து 31,500 டோஸ்கள் கொரோனா தடுப்பூசி சேலம் வந்தன


சென்னையில் இருந்து 31,500 டோஸ்கள் கொரோனா தடுப்பூசி சேலம் வந்தன
x
தினத்தந்தி 17 Jun 2021 3:29 AM IST (Updated: 17 Jun 2021 3:29 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் இருந்து மேலும் 31,500 டோஸ்கள் கொரோனா தடுப்பூசி சேலத்துக்கு வந்தன.

சேலம்:
சென்னையில் இருந்து மேலும் 31,500 டோஸ்கள் கொரோனா தடுப்பூசி சேலத்துக்கு வந்தன.
பொதுமக்கள் ஏமாற்றம்
சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 80 ஆயிரத்தை தாண்டியது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. நோய் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடந்த ஜனவரி மாதம் முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன.
கொரோனாவின் பாதிப்புகளும் மற்றும் உயிரிழப்புகளும் அதிகரித்ததை தொடர்ந்து பொதுமக்கள் தடுப்பூசி போடுவதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கிடையில் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படுவதால் தடுப்பூசி போடும் பணி அவ்வப்போது நிறுத்தி வைக்கப்படும். இந்த நிலையில் தடுப்பூசிகள் இருப்பு இல்லாததால் நேற்று 2-வது நாளாக மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டன. இதனால் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு தடுப்பூசி போடுவதற்காக வந்த பொதுமக்கள் பலர் நேற்றும் ஏமாற்றதுடன் திரும்பி சென்றனர்.
31,500 டோஸ்கள்
இந்த நிலையில் சென்னையில் இருந்து வாகனம் மூலம் நேற்று தடுப்பூசிகள் சேலத்துக்கு கொண்டு வரப்பட்டன. சேலம் மற்றும் ஆத்தூர் சுகாதார மாவட்டங்களுக்கு சேர்த்து மொத்தம் 31,500 தடுப்பூசி டோஸ்கள் வந்தன. இதில் 25,500 கோவிஷீல்டும், 6 ஆயிரம் கோவேக்சினும் அடங்கும்.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும் போது, மாவட்டத்தில் போதிய அளவு கொரோனா தடுப்பூசிகள் இல்லாததால் 2-வது நாளாக இன்றும் (நேற்று) தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட்டன. இந்த நிலையில் சென்னையில் இருந்து 31,500 டோஸ்கள் வந்து உள்ளதால் நாளை (இன்று) முதல் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி மையங்களில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்றனர்.

Next Story