நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை தீவிரம்: முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் ஒரு அடி உயர்வு

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை தீவிரம் அடைந்ததால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 1 அடி உயர்ந்தது.
கூடலூர்:
தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட 5 மாவட்ட மக்களின் நீர்ப்பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை திகழ்கிறது. இந்த அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்போது தென்மேற்கு பருவமழை அதிகளவில் பொழிந்து இருக்கிறது. இதன் எதிரொலியாக முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
இதைத்தொடர்ந்து 152 அடி உயரமுள்ள முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 131.70 அடியாகவும், அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,808 கனஅடியாகவும் இருந்தது. இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை மேலும் தீவிரம் அடைந்தது. இதனால் அணைக்கு நீர் வரத்து மேலும் அதிகரித்து நீர்மட்டம் உயர தொடங்கியது.
ஒரே நாளில் 1 அடி உயர்வு
அதன்படி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் நேற்று 131.70 அடியிலிருந்து 132.75 அடியாக உயர்ந்தது. அதாவது ஒரே நாளில் 1 அடி வரை உயர்ந்துள்ளது. நீர் வரத்து வினாடிக்கு 4,239 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 1,400 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையில் 5 ஆயிரத்து 341 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது.
இதே போல் 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நேற்றைய நீர் மட்டம் 66.17 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 840 கனஅடி நீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 969 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையில் 4 ஆயிரத்து 893 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. 57 அடி உயரமுள்ள மஞ்சளாறு அணையின் நேற்றைய நீர்மட்டம் 55 அடியாக இருந்தது. அணைக்கு நீர் வரத்தும், வெளியேற்றமும் இல்லை. அணையில் 435.32 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.
மழையளவு
126 அடி உயரமுள்ள சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் நேற்று 126.28 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3 கனஅடி தண்ணீர் வருகிறது. அந்த தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. அணையில் 100 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்) வருமாறு:-பெரியாறு-60, தேக்கடி-28, கூடலூர்-9.2, சண்முகாநதி அணை-6.7, உத்தமபாளையம்-5.
Related Tags :
Next Story