ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி கோரி ஓ.என்.ஜி.சி. அளித்த விண்ணப்பத்தை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் - மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு வலியுறுத்தல்

ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி கோரி ஓ.என்.ஜி.சி. அளித்த விண்ணப்பத்தை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் என்று மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.
மயிலாடுதுறை,
இதுகுறித்து மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
கடந்த 10-ந் தேதி, புதுக்கோட்டை மாவட்டத்தில் வடதெரு பகுதியில் , அடையாளம் காணப்பட்ட சிறிய எண்ணெய் வயல்கள் திட்டத்தின்கீழ், ஹைட்ரோகார்பன் சர்வதேச ஏலத்திற்கான அழைப்பு அறிக்கையை ஹைட்ரோகார்பன் இயக்குனரகம் வெளியிட்டது. தமிழகம் முழுவதும் கண்டனக்குரல் எழுந்த நிலையில், கடந்த 13-ந் தேதி, காவிரிப் படுகை பகுதியை ஏலப்பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதினார்.
இந்த நிலையில், கடந்த 15-ந் தேதி ஓ.என்.ஜி.சி.நிறுவனம் தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்திற்கு, பெட்ரோலியம் சுரங்க குத்தகை திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்டத்தில் 10 ஹைட்ரோகாபன் ஆய்வு கிணறுகளும், கடலூர் மாவட்டம் நெய்வேலியில் 5 ஹைட்ரோகார்பன் கிணறுகளும் 948 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைக்க திட்டம் தயாரித்துள்ளது. அதில், அரியலூர் மாவட்டத்தில் 10 எண்ணெய் -எரிவாயு ஹைட்ரோ கார்பன் ஆய்வுக் கிணறுகள் அமைக்க, தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்திற்கு அனுமதி கோரி ஓ.என்.ஜி.சி. விண்ணப்பித்துள்ளது. அதில் எண்ணெய் - எரிவாயு திட்டங்களுக்கு மக்கள் கருத்து கேட்பு இனி தேவையில்லை என்று சுற்றுச்சூழல் அமைச்சகம் முன்னமே அறிவித்துள்ளதை சுட்டிக்காட்டி, மக்கள் கருத்துக் கேட்பு இல்லாமலே அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளது.
தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் கிணறுகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்காது என்று தமிழக முதல்-அமைச்சர் தெளிவாக அறிவித்துள்ள நிலையில், ஓ.என்.ஜி.சி. சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழக அரசிடமே விண்ணப்பித்துள்ளது அதிர்ச்சியை தருகிறது. இந்த விண்ணப்பம் உடனடியாக, தமிழக அரசால் நிராகரிக்கப்பட வேண்டும். ஓ.என்.ஜி.சி. மற்றும் எண்ணெய் எரிவாயு எடுக்க முயற்சிக்கும் அத்தனை நிறுவனங்களும் தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும். அவர்களுடைய அனுமதி கோரும் விண்ணப்பங்கள் முதற்கட்டத்திலேயே பரிசீலனையே செய்யப்படாமல் நிராகரிக்கப்பட வேண்டும்.
கடந்த 2020-ம் ஆண்டு, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களும் கடலூரில் 5 வட்டங்கள், புதுக்கோட்டையில் 5 வட்டங்கள் மட்டுமே சேர்க்கப்பட்டன. தொடக்கத்தில் நாகை, திருவாரூர், தஞ்சை, கடலூர், புதுக்கோட்டை, அரியலூர், திருச்சி, கரூர் ஆகிய 8 மாவட்டங்களை உள்ளடக்கியதாக பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அமையும் என்று அன்றைய தமிழக அரசு அறிவித்தது. ஆனால், அது நிறைவேற்றப்படவில்லை. எனவே அரியலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களையும் உடனடியாகக் காவிரிப்படுகைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, காவிரிப்படுகை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல ஆணையத்தின் அதிகார வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்று தமிழக அரசை கேட்டு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story