உளுந்தூர்பேட்டை அருகே குடும்ப தகராறில் தந்தை மகன் தற்கொலை

உளுந்தூர்பேட்டை அருகே குடும்ப தகராறில் தந்தை, மகன் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டனர். இதில் போலீசுக்கு தெரியாமல் மகன் உடலை எரித்ததால் 50 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்
உளுந்தூர்பேட்டை
தொழிலாளி
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள புகைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன்(வயது 43) தொழிலாளி.
மது குடிக்கும் பழக்கம் உள்ள இவர், சம்பவத்தன்று இரவு மதுகுடித்து விட்டு வந்து அவரது மனைவி பூமாதேவியிடம் தகராறு செய்து அவரை தாக்கியதாக தெரிகிறது.
இதைப்பார்த்த அவரது மகன் குபேந்திரன், இப்பிரச்சினையை தடுக்க முயன்றார். ஆனால் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டதால் ஆத்திரம் அடைந்த குபேந்திரன், தனது தந்தை சீனிவாசனின் கன்னத்தில் அறைந்தார்.
மகன் தற்கொலை
இதனால் அவமானம் அடைந்த அவர் பூச்சி மருந்தை வாங்கி வந்து மதுவில் கலந்து குடித்தார். இதில் மயங்கி விழுந்த சீனிவாசனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், தனது தந்தை தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் மனமுடைந்த குபேந்திரன், தவறை உணர்ந்து கதறி அழுதுள்ளார். அப்போது விரக்தியடைந்த அவர் திடீரென மனதை கல்லாக்கி கொண்டு, வீ்ட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போலீசுக்கு தெரியாமல் உடல் எரிப்பு
இதுபற்றிய தகவல் அறிந்து எலவனாசூர்கோட்டை போலீசார் புகைப்பட்டி கிராமத்துக்கு வந்தனர். ஆனால் அதற்குள் குபேந்திரனின் உடலை அவரது உறவினர்கள் ஊருக்கு வெளியே எடுத்து சென்று தீவைத்து எரித்து விட்டனர். இதனால் போலீசாருக்கும் கிராம மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்து போலீசார் கலைந்து சென்றனர். மேலும் இது தொடர்பாக 50 பேர் மீது போலீசார்வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த சீனிவாசன், நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். குடும்ப பிரச்சினையில் மகன், தந்தை அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story