போலீஸ் ஐ.ஜி. ராகவேந்திர சுகாசுக்கு சி.ஐ.டி. நோட்டீசு அனுப்பியது

பறிமுதல் செய்யப்பட்ட காரில் இருந்த 5 கிலோ தங்கநகைகள் மாயமான வழக்கில், விசாரணைக்கு ஆஜராக ஐ.ஜி. ராகவேந்திர சுகாசுக்கு சி.ஐ.டி. போலீசார் நோட்டீசு அனுப்பி உள்ளனர்.
பெங்களூரு: பறிமுதல் செய்யப்பட்ட காரில் இருந்த 5 கிலோ தங்கநகைகள் மாயமான வழக்கில், விசாரணைக்கு ஆஜராக ஐ.ஜி. ராகவேந்திர சுகாசுக்கு சி.ஐ.டி. போலீசார் நோட்டீசு அனுப்பி உள்ளனர்.
கார் விடுவிப்பு
பெலகாவி மாவட்டம் யமகனமரடி போலீசார் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கேரள பதிவெண் கொண்ட காரை போலீசார் சோதனை நடத்திய போது அதில் தங்கநகைகள் இருந்தன. அந்த நகைகளை கொண்டு செல்ல உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்தது. இதனால் அந்த காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் அந்த நகையை நகைக்கடைக்கு கொடுப்பதற்காக காரில் எடுத்து சென்றதாகவும், அந்த காரை விடுவிக்க போலீசாருக்கு உத்தரவிட கோரியும் நகையின் உரிமையாளர் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு காரை விடுவிக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டது. அதன்படி காரையும் போலீசார் விடுவித்து இருந்தனர்.
சி.ஐ.டி. விசாரணை
இந்த நிலையில் விடுவிக்கப்பட்ட காரில் இருந்த 4 கிலோ 900 கிராம் நகைகள் மாயமானதாக நகையின் உரிமையாளர் யமகனமரடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தங்க நகைகள் மாயமானதில் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் தங்க நகைகள் மாயமானது குறித்து சி.ஐ.டி. விசாரணைக்கு அரசு உத்தரவிட்டது. அதன்படி நகைகள் மாயமான வழக்கை சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
போலீஸ் ஐ.ஜி.க்கு நோட்டீசு
இந்த நிலையில் தங்க நகைகள் மாயமான வழக்கில் விசாரணைக்கு ஆஜராக பெங்களூருவில் உள்நாட்டு பிரிவில் ஐ.ஜி.யாக பணியாற்றி வரும் ராகவேந்திரா சுகாசுக்கு சி.ஐ.டி. போலீசார் நோட்டீசு அனுப்பி உள்ளனர். ஆனால் அவர் தனக்கும், குடும்பத்தினருக்கும் கொரோனா பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், கொரோனாவில் இருந்து மீண்டதும் விசாரணைக்கு ஆஜராக உள்ளதாகவும் சி.ஐ.டி. போலீசாரிடம் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. தங்கநகைகள் மாயமான போது ராகவேந்திர சுகாஸ் வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.யாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story