சாயர்புரம் அருகே பயங்கர ஆயுதங்களுடன் வாலிபர் கைது

சாயர்புரம் அருகே பயங்கர ஆயுதங்களுடன் வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சாயர்புரம்:
சாயர்புரம் அருகே பயங்கர ஆயுதங்களுடன் வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவர் கூலிப்படையை சேர்ந்தவரா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பயங்கர ஆயுதங்கள்
சாயர்புரம் போப் கல்லூரி அருகே சாயர்புரம் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் தலைமை காவலர் சங்கர், போலீசார் இன்பராஜ், இளையராஜா ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர்.
மோட்டார் சைக்கிளில் மான்கொம்பு, கத்தி, வீச்சரிவாள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் நடத்திய விசாரணையில், அவர் சிவத்தையாபுரம் காளிமுத்து மகன் ஆனந்த சேகர்(வயது38) என தெரிய வந்தது.
வீட்டில் சோதனை
அவரை போலீசார் சாயர்புரம் போலீஸ் நிைலயத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட போலீஸ் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உத்தரவின் பேரில், ஸ்ரீவைகுண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கடேசன், ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா தலைமையில் போலீசார் சிவத்தையாபுரத்திலுள்ள சேகரின் வீட்டுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அந்த வீட்டில், மேலும் 3 பெரிய வீச்சரிவாள், ஒரு அரிவாள், 3 ்பெரிய கத்தி, மான் கொம்பு, கைப்பிடியுடன் கூடிய பெரிய குத்துவிளக்கு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கைது
பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்களை தூத்துக்குடி மாவட்ட போலீஸ சூப்பிரண்டு நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இது தொடர்பாக சாயர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சேகரை கைது செய்தனர். ஆயுதங்கள் அவருக்கு எப்படி வந்தது? அவர் மீது வேறு வழக்குகள் ஏதும் உள்ளதா? கூலிப்படையினருடன் இவருக்கு தொடர்பு உண்டா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவரை கைது செய்த போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார்.
Related Tags :
Next Story