பழனி முருகன் கோவிலில் 108 சங்காபிஷேகம்

பழனி முருகன் கோவிலில் உலக நலன் வேண்டி 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.
பழனி:
பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாத கேட்டை நட்சத்திர நாளன்று அன்னாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. மழைவளம் பெருகவும், உலகநலன் வேண்டியும், மக்கள் பசி, பிணியின்றி வாழவும் இந்த பூஜைகள் செய்யப்படுகிறது.
அதன்படி இந்த ஆண்டுக்கான அன்னாபிஷேக நிகழ்ச்சி நேற்று முன்தினம் பழனி முருகன் கோவில் பாரவேல் மண்டபத்தில் நடந்தது. முன்னதாக தங்க சப்பரத்தில் 3 கலசங்களில் புனிதநீர் வைக்கப்பட்டும், 108 சங்குகளில் புண்ணிய தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தம் வைத்தும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், கலச பூஜை நடைபெற்றதை தொடர்ந்து 108 சங்குகளுக்கு முன்பு கந்த ஹோமம், பூர்ணாகுதி நடைபெற்றது. பின்பு தங்க சப்பரத்தில் வைக்கப்பட்ட கலசங்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டது.
இதையடுத்து கலசங்கள், 108 வலம்புரி சங்குகள் கோவில் உட்பிரகாரம் சுற்றிவந்து மூலவர் சன்னதிக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதைத்தொடர்ந்து உச்சிக்கால பூஜையில் மூலவருக்கு 16 வகை அபிஷேகம், கலச அபிஷேகம், 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. பின்பு மஞ்சள் நிற அன்னத்தால் மூலவருக்கு அலங்காரம் செய்யப்பட்டு, கிரீடம் வைக்கப்பட்டு சுத்த அன்னத்தால் அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து 16 வகை தீபாராதனை காட்டப்பட்டது. நிகழ்ச்சியில் கோவில் உதவி ஆணையர் செந்தில்குமார் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் சித்தனாதன் சன்ஸ் குடும்பத்தினர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story