திருவண்ணாமலையில் கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டதால் வெறிச்சோடிய கிரிவலப்பாதை


திருவண்ணாமலையில் கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டதால் வெறிச்சோடிய கிரிவலப்பாதை
x

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டதால் நேற்று கிரிவலப்பாதை பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்துக்கு  தடை விதிக்கப்பட்டதால் நேற்று கிரிவலப்பாதை பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

கொரோனா ஊரடங்கு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் தூரம் கிரிவலம் செல்வார்கள்.

தமிழகத்தில் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 
ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவதால் 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வந்த பவுர்ணமியில் இருந்து திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்திற்கு மாவட்ட நிர்வாகம் மூலம் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகிறது.

இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று அதிகாலை 3.10 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 12.55 மணிக்கு நிறைவடைந்தது.

வெறிச்சோடிய கிரிவலப்பாதை

கொரோனா பரவலை கட்டுப்படுத்த சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நடைமுறையில் உள்ளதால் இந்த மாதமும் பவுர்ணமி கிரிவலத்திற்கு தடை விதிக்கப்பட்டது. 

இதனால் நேற்று அதிகாலையில் இருந்து கிரிவலப்பாதையில் முக்கிய சாலை சந்திப்பு பகுதியில் தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் சிலர் தனித்தனியாக நடந்தும், மோட்டார் சைக்கிளிலும், சைக்கிளிலும் கிரிவலம் சென்றனர். 

கிரிவலப்பாதையில் போலீசார் ஒலிபெருக்கி மூலம் கிரிவலத்திற்கு தடை விதிக்கப்பட்டிருப்பது குறித்து தொடர்ந்து அறிவித்தனர். 

கிரிவலத்திற்கு தடை விதிக்கப்பட்டதன் காரணமாக நேற்று பக்தர்கள் இன்றி கிரிவலப்பாதை வெறிச்சோடி காணப்பட்டது. 

பக்தர்கள் வேண்டுகோள்

வழக்கமாக பவுர்ணமி மட்டுமின்றி விசேஷ நாட்களில் திருவண்ணாமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். 

இதனால் சிறு, குறு வியாபாரிகள், விவசாயிகள் என பல்வேறு தரப்பு மக்களுக்கும், போக்குவரத்து துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளுக்கும் வருவாய் கிடைத்து வந்தது. 

கொரோனா ஊரடங்கு காரணமாக தொடர்ந்து கிரிவலத்திற்கு தடை விதிக்கப்பட்டு வருவதால் திருவண்ணாமலையில் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. 

எனவே கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் அடுத்த பவுர்ணமிக்காவது கிரிவலம் செல்ல அனுமதிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

Next Story