திருச்சி விமான நிலைய சுங்கத்துறை கண்காணிப்பாளர் அதிரடி மாற்றம்


திருச்சி விமான நிலைய சுங்கத்துறை கண்காணிப்பாளர் அதிரடி மாற்றம்
x
தினத்தந்தி 25 Jun 2021 12:39 AM IST (Updated: 25 Jun 2021 12:53 AM IST)
t-max-icont-min-icon

11½ கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் எதிரொலியாக திருச்சி விமான நிலைய சுங்கத்துறை கண்காணிப்பாளர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

செம்பட்டு, 

திருச்சி விமான நிலையத்திற்கு தற்போது வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவது வாடிக்கையாகி வருகிறது. இதற்கு திருச்சியில் உள்ள சில அதிகாரிகளும், ஊழியர்களும் உடந்ைதயாக இருப்பதாக புகார் எழுந்தது.

இந்தநிலையில் கடந்த 22-ந்தேதி சார்ஜாவில் இருந்து திருச்சிக்கு வந்த ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் அதிக அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அந்த விமானத்தில் வந்த பயணிகளை அவர்கள் சோதனை செய்தனர். 

அப்போது அந்த விமானத்தில் வந்த 5 பயணிகள் தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து 4 கிலோ 435 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விமான நிலைய ஆண்கள் கழிவறையில் கேட்பாரற்று கிடந்த 1 கிலோ 796 கிராம் தங்கமும் கைப்பற்றப்பட்டது.

அத்துடன் நேற்று முன்தினம் சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த விமானத்தில் பயணிகளிடம் நடத்தி சோதனையில் 5 பயணிகளிடம் இருந்து 5 கிலோ 170 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த 2 நாட்களில் மட்டும் திருச்சி விமான நிலையத்தில் 11 கிலோ 401 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் தங்கம் கடத்தலுக்கு திருச்சியில் உள்ள சுங்கத்துறை அதிகாரிகள் சிலர் உடந்தையாக இருந்தது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து திருச்சி விமான நிலையத்தில் சுங்கத் துறை கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த ஜெயப்பிரகாஷ் திருச்சியில் உள்ள சுங்கத்துறை தலைமை இடத்திற்கு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார். 
மேலும், திருச்சி விமான நிலையத்தில் பணியாற்றும் சுங்கத்துறை ஆய்வாளர்கள் 3 பேருக்கு சுங்கத்துறை இணை ஆணையர் நேரில் அழைத்து எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் சுங்கத்துறையினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story