குமரியில் இதுவரை 3¼ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

குமரியில் இதுவரை 3¼ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
நாகர்கோவில்:
குமரியில் இதுவரை 3¼ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
சிறப்பு முகாம்கள்
குமரி மாவட்டத்தில் சிறப்பு முகாம்கள் மற்றும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றின் மூலம் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 3 லட்சத்து 18 ஆயிரத்து 943 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று மாவட்டத்தில் 37 இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.
நாகர்கோவில் நகரில் நேற்று சிறப்பு முகாம்கள் நடைபெற வில்லை. ஆனால் வருவாய் துறை ஊழியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதனால் நேற்று காலையிலேயே வருவாய்துறை ஊழியர்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் ஆண்களும், பெண்களுமாக ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டு சென்றனர். இந்த முகாமில் 350-க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
நீண்ட வரிசை
இதேபோல் மாவட்டம் முழுவதும் 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் 20 இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. மேலும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 16 இடங்களில் தடுப்பூசி போடும் பணி நடந்தது.
இந்த முகாம்கள் அனைத்திலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டு சென்றனர். எனவே தடுப்பூசி போடும் பணி நடைபெற்ற அனைத்துப் பகுதிகளும் நேற்று காலை முதல் மதியம் வரை பரபரப்புடன் காட்சியளித்தது. நேற்று ஒரே நாளில் 37 இடங்களிலும் 7,350-க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 3¼ லட்சத்தை கடந்துள்ளது.
Related Tags :
Next Story