குடும்ப தலைவிக்கு ரூ.1,000 வழங்கும் திட்டத்துக்கு விரைவில் அரசாணை

குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்துக்கு விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி கூறினார்.
திண்டுக்கல்:
குடும்ப தலைவிக்கு ரூ.1,000
தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி, திண்டுக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
மக்களின் நலனுக்காக ரூ.4 ஆயிரம் மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த 14 வகை மளிகை பொருட்கள் அனைத்து குடும்பங்களுக்கும் வழங்கப்படும். மாநிலம் முழுவதும் 99 சதவீதம் வழங்கப்பட்டு விட்டது. மேலும் விடுபட்ட நபர்களையும் கண்டறிந்து பொருட்கள் வழங்கப்படும்.
அதேபோல் குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்துக்கு விரைவில் அரசாணை வெளியாகும். அதற்கான அறிவிப்பை முதல்-அமைச்சர் வெளியிடுவார். எந்த குறையும் இல்லாமல் அந்த திட்டம் நிறைவேற்றப்படும்.
ஜெய்ஹிந்த் விவகாரம் குறித்து முதல்-அமைச்சர் விளக்கி இருக்கிறார். ஊராட்சிகளில் போதுமான அளவு குடிநீர் இருக்கிறது. எனவே, குடிநீர் முழுமையாக கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
தடையில்லா மின்சாரம்
2006-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் 4 ஆயிரம் மெகாவாட் அனல் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த திட்டம் 2010-ல் பயன்பாட்டுக்கு வந்தது. அந்த வகையில் தமிழகத்தில் தொலைநோக்கு மின்சார திட்டத்தின் பிதாமகன் கருணாநிதி தான்.
தமிழகத்தில் தற்போது மின்வெட்டு இல்லை. விவசாயம் மற்றும் வீடுகளுக்கு தேவையான மின்சாரம் தடையின்றி வழங்கப்படும். மேலும் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்தால் மீட்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோவில் பணியாளர்களுக்கு உதவி
முன்னதாக திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் வளாகத்தில் நடந்த விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி கலந்து கொண்டு கோவில் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதில் கோவில் அர்ச்சகர்கள், பூசாரிகள், பணியாளர்கள் என 188 பேருக்கு தலா ரூ.4 ஆயிரம், 10 கிலோ அரிசி மற்றும் 14 வகை மளிகை பொருட்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் வேலுச்சாமி எம்.பி., கலெக்டர் விசாகன், உதவி கலெக்டர் பிரியங்கா, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அனிதா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story