ஜாமீனில் வந்த ரவுடியை கொன்று ஆற்றில் புதைத்த 5 பேர் கைது
ஜாமீனில் வந்த ரவுடியை கொன்று ஆற்றில் புதைத்ததாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். ரவுடியின் உடல், 21 நாட்களுக்கு பிறகு தோண்டி எடுக்கப்பட்டது.
ஸ்ரீரங்கம்
ஜாமீனில் வந்த ரவுடி
திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதி சங்கர் நகரில் வசிப்பவர் கணேசன். இவரது மகன் நவீன்குமார் (வயது 37). ரவுடியான இவா் மீது ஒரு கொலை வழக்கு மற்றும் 15 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதற்காக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் கடந்த மாதம் 31-ந் தேதி சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்தார்.
அதனைத்தொடர்ந்து கடந்த 7-ந் தேதி, நண்பர்களை பார்த்து விட்டு வருவதாக வெளியே சென்ற நவீன்குமார் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால், பதற்றம் அடைந்த கணேசன், தனது மகனை காணவில்லை என்று ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
5 பேர் கைது
புகாரின்பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜாமீனில் வெளியே வந்த நவீன்குமார் எங்கு போனார்?, என்ன ஆனார்? என்று தீவிர விசாரணை நடத்தினர். மேலும், கடந்த 7-ந் தேதி நவீன்குமாருடன் இருந்த அவரது நண்பர்களான தெப்பக்குளத்தெருவை சேர்ந்த கோவில்பிள்ளை (47), சந்திரமோகன் (39), வடக்குவாசல் பகுதியை சேர்ந்த சங்கர் (32), மணிமாறன் (34), கீழவாசல் பகுதியை சேர்ந்த விஜயகுமார் (37) ஆகிய 5 பேரை நேற்று பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள், சம்பவத்தன்று நவீன்குமாரை கொன்று கொள்ளிடம் ஆற்றில் புதைத்து விட்டதாக திடுக்கிடும் தகவலை தெரிவித்தனர். பின்னர் நவீன்குமாரை கொன்று புதைத்த இடத்தையும் அவர்கள் அடையாளம் காட்டினர்.
உடல் தோண்டி எடுப்பு
அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், ஸ்ரீரங்கம் போலீஸ் உதவி கமிஷனர் சுந்தரமூர்த்தி, போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன், தாசில்தார் மகேந்திரன், கிராம நிர்வாக அலுவலர்கள் குமார்(வெள்ளிதிருமுத்தம்), பத்மா(மேலூர்) ஆகியோர் முன்னிலையில் நவீன்குமார் உடல் நேற்று தோண்டி எடுக்கப்பட்டது.
நவீன்குமார் உடல் புதைக்கப்பட்டு 21 நாட்கள் ஆகிவிட்டதால் உடல் அழுகிய நிலையில் இருந்தது. அதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திலேயே ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை டாக்டர்கள் செல்வமுத்து குமரன், வெங்கட்ராமன் ஆகியோர் நவீன்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். இந்த கொலை தொடர்பாக ஸ்ரீரங்கம் போலீசார் கோவில்பிள்ளை உள்பட 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரபரப்பு வாக்குமூலம்
இந்த கொலை சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட 5 பேரும் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர். இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறப்பட்டதாவது:- குற்ற வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த நவீன்குமார், கோவில்பிள்ளையின் உறவுக்கார பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுதொடர்பாக நவீன்குமார் மீது கோவில்பிள்ளை ஆத்திரத்தில் இருந்தார். இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி நள்ளிரவு ஸ்ரீரங்கம் அருகே கொள்ளிடம் ஆற்றில் நெடுந்தெரு படித்துறை பகுதியில் நவீன்குமார் மற்றும் அவரது நண்பர்கள் கோவில்பிள்ளை உள்பட 5 பேரும் அமர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது கோவில்பிள்ளையிடம் அதிகளவு பணம் இருந்துள்ளது. அந்தப்பணத்தை நவீன்குமார் கேட்டு தகராறு செய்துள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பரபரப்பு
அப்போது தனது உறவுக்கார பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்காக நவீன்குமார் மீது ஆத்திரத்தில் இருந்த கோவில்பிள்ளை கத்தியால் நவீன்குமாரை குத்தியுள்ளார். பின்னர், 5 பேரும் சேர்ந்து அவரை தாக்கியும் உள்ளனர். இதில், சம்பவ இடத்திலேயே நவீன்குமார் இறந்து விட்டார். பின்னர் அவரது உடலை ஆற்றில் குழிதோண்டி புதைத்து விட்டு யாருக்கும் தெரியாதது போல நடந்து கொண்டுள்ளனர். தற்போது அவர்கள் 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஜாமீனில் வெளியே வந்த பிரபல ரவுடி நண்பர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story