கொரோனாவால் பெற்றோரை இழந்த 78 குழந்தைகளுக்கு நிதி உதவி


கொரோனாவால் பெற்றோரை இழந்த 78 குழந்தைகளுக்கு நிதி உதவி
x
தினத்தந்தி 1 July 2021 8:24 PM IST (Updated: 1 July 2021 8:26 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்த 78 குழந்தைகளுக்கு நிதி உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி பிரபு கூறினார்.

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்த 78 குழந்தைகளுக்கு நிதி உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி பிரபு கூறினார்.

ஆதரவின்றி...

தமிழகத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று அரசு உத்தரவிட்டது. இதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் தொற்று பாதித்து சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் குழந்தைகள் எத்தனை பேர் உள்ளனர்? என்று கணக்கெடுக்கப்பட்டது. 

தந்தை, தாய் ஆகியோர் இறந்து உள்ளார்களா? அல்லது அதில் யாராவது ஒருவர் இறந்து இருக்கிறாரா? என்று விசாரித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டது. இதில் சில குழந்தைகள் ஆதரவின்றி இருப்பது தெரியவந்தது. அவர்களுக்கு அரசு மூலம் உதவ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நிதி உதவி

இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி பிரபு கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் 50 குடும்பங்களை சேர்ந்த 86 குழந்தைகள் கொரோனா பாதிப்பு காரணமாக பெற்றோர்களை இழந்து பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 2 பேர் தந்தை, தாய் ஆகியோரை இழந்து இருக்கின்றனர். 

84 பேர் தந்தை அல்லது தாயை இழந்து உள்ளனர். தாய், தந்தையை இழந்து வாடும் குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்பட உள்ளது. இந்த தொகையை 18 வயதுக்கு மேல் அவர்கள் எடுத்துக்கொள்ளலாம். இது தவிர படிப்பு செலவுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கப்படுகிறது. பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

அரசு பணி

நீலகிரியில் இந்த திட்டத்தில் 8 பேருக்கு தகுதி இல்லை. அவர்கள் அரசு ஊழியர்களின் குழந்தைகள் என்பதால் கருணை அடிப்படையில் அரசு பணி கிடைக்கும். இதனால் அவர்களுக்கு நிவாரண தொகை கிடைக்காது. மீதமுள்ள 78 பேர் பயன் பெறுவர். 

குழந்தைகள் உறவினர்கள் அல்லது பெற்றோர் ஒருவரது பாதுகாப்பில் உள்ளார்களா, சரியான சூழ்நிலை இருக்கிறதா என்று தொடர்ந்து 18 வயது வரை கண்காணிக்க மாவட்ட கலெக்டர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story