கட்டுமான பொருட்கள் விலை அதிகரிப்பு

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் நீலகிரியில் கட்டுமான பொருட்கள் விலை அதிகரித்து உள்ளது.
ஊட்டி,
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் நீலகிரியில் கட்டுமான பொருட்கள் விலை அதிகரித்து உள்ளது.
விலை உயர்வு
நீலகிரி மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஊட்டியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 101 ரூபாய் 83 பைசாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. டீசல் 95 ரூபாய் 46 பைசாவுக்கு விற்பனையானது.
ஸ்பீடு பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.104-ஐ கடந்து உள்ளது. எரிபொருள் விலை உயர்ந்து வருவதால் சரக்கு வாகனங்கள், லாரிகள் போன்றவற்றுக்கான வாடகை கட்டணம் அதிகரித்து உள்ளது. இதனால் கட்டுமான பொருட்கள் விலை உயர்ந்து வருகிறது.
கட்டுமான பொருட்கள்
செங்கல், ஜல்லி, எம்.சாண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் விலை கிடு, கிடு என உயர்ந்து உள்ளது. செங்கல் ஒன்று ரூ.10-ல் இருந்து ரூ.12, ஒரு யூனிட் எம்.சாண்ட் மணல் ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.6,500, ஒரு யூனிட் ஜல்லி ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.5,500, ஹாலோ பிளாக் கல் ஒன்று ரூ.35-ல் இருந்து ரூ.40, 50 கிலோ சிமெண்டு மூட்டை ரூ.420-ல் இருந்து ரூ.470 ஆக விலை உயர்ந்து உள்ளது. கான்கிரீட்டுக்கு பயன்படுத்தப்படும் கம்பி ஒரு கிலோ ரூ.55-ல் இருந்து ரூ.70 ஆக அதிகரித்து இருக்கிறது.
ஊட்டி மலைப்பிரதேசம் என்பதால், இங்கு சுற்றுச்சூழலை பாதுகாக்க செங்கல் சூளைகள், கல்குவாரிகள் கிடையாது. இதனால் சமவெளி பகுதியில் இருந்து அனைத்து கட்டுமான பொருட்களும் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
குறைக்க வேண்டும்
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு வர லாரி வாடகை கட்டணம் ரூ.7 ஆயிரத்தில் இருந்து ரூ.2,000 அதிகரித்து ரூ.9 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. சரக்கு வாகனம் ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.3 ஆயிரமாக கட்டணம் உயர்ந்து உள்ளது.
ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கி நடைபெற்றாலும், விலை உயர்வால் கட்டுமான பொருட்கள் விற்பனை குறைவாக இருக்கிறது. மேலும் விலை உயர்வால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே கட்டுமான பொருட்கள் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story