தேனி மாவட்டத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்ட கில்லாடி திருடன் கைது
தேனி மாவட்டத்தில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட கில்லாடி திருடனை போலீசார் கைது செய்தனர் அவரிடமிருந்து கார், 14 கம்ப்யூட்டர்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தேனி:
தேனி மாவட்டத்தில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட கில்லாடி திருடனை போலீசார் கைது செய்தனர் அவரிடமிருந்து கார், 14 கம்ப்யூட்டர்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர் திருட்டு
தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் உள்ள கம்பம் சாலையோரம் வாகன பராமரிப்பு நிலையம் நடத்தி வருபவர் ராமராஜன். இவருடைய வாகன பராமரிப்பு நிலையத்தில் கடந்த மாதம் 2-ந்தேதி பூட்டை உடைத்து உள்ளே இருந்த கம்ப்யூட்டர் திருடு போனது. அதே நாளில், அதற்கு அருகில் சுந்தர் என்பவருடைய வாகன பராமரிப்பு நிலையத்திலும் 2 கம்ப்யூட்டர்கள் திருட்டு போனது. இந்த சம்பவங்கள் குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதேபோல் தேனி, கொடுவிலார்பட்டி, ஆண்டிப்பட்டி ஆகிய இடங்களிலும் பூட்டிக்கிடந்த வணிக நிறுவனங்களில் கம்ப்யூட்டர், டி.வி. போன்ற பொருட்கள் திருடு போயின. இந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது யார்? என்பதை கண்டறிந்து கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவின்பேரில், தேனி போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துராஜ் மேற்பார்வையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் மதனகலா, சப்-இன்ஸ்பெக்டர்கள் சுல்தான் பாட்ஷா, சரவணன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் நடத்திய தீவிர விசாரணையில் இந்த தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது கூடலூரை சேர்ந்த அய்யர்தேவர் மகன் செந்தில்குமார் (வயது 31) என்று தெரியவந்தது. தற்போது அவர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பன்னியான் என்ற கிராமத்தில் வசித்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.
திருடன் கைது
இதையடுத்து செந்தில்குமாரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் தேனி மாவட்டத்தில் பல இடங்களில் பூட்டிக் கிடந்த வணிக நிறுவனங்களில் கம்ப்யூட்டர், மடிக்கணினி மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை திருடியது தெரியவந்தது. நள்ளிரவில் காரில் சென்று பொருட்களை திருடியுள்ளார். இதையடுத்து திருட்டுக்கு பயன்படுத்திய கார் மற்றும் அவர் திருடிய 16 கம்ப்யூட்டர்கள், தலா ஒரு மடிக்கணினி, எல்.இ.டி. டி.வி. என சுமார் ரூ.6 லட்சம் மதிப்பிலான பொருட்களை போலீசார் கைப்பற்றினர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைதான செந்தில்குமார் கில்லாடி திருடனாக உலா வந்துள்ளார். பகல் நேரத்தில் காரில் சென்று நோட்டமிட்டு, நள்ளிரவில் சென்று பூட்டை உடைத்து திருடியுள்ளார். இவர் மீது ஏற்கனவே திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 16 திருட்டு வழக்குகள் உள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.
இந்த தனிப்படையில் இடம்பெற்ற போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீஸ் ஏட்டுகள் மகேஷ், விஜய், நாகராஜ், சம்சு, செல்வம் ஆகியோருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே பாராட்டு தெரிவித்தார்.
Related Tags :
Next Story