நீலகிரி மாவட்ட எல்லையில் போலீசார் தீவிர கண்காணிப்பு


நீலகிரி மாவட்ட எல்லையில் போலீசார் தீவிர கண்காணிப்பு
x

வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளதால், நீலகிரி மாவட்ட எல்லையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கூடலூர்

வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளதால், நீலகிரி மாவட்ட எல்லையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இ-பாஸ் கட்டாயம்

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி மாவட்டங்கள் இடையே செல்ல இ-பாஸ் பெற வேண்டியது இல்லை என்று அரசு அறிவித்து உள்ளது. ஆனால் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்குள் வருவதற்கு இ-பாஸ் கட்டாயம் பெற வேண்டும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

இதையொட்டி நேற்று முதல் நீலகிரி மாவட்டத்தில் அரசு பஸ் போக்குவரத்து தொடங்கியது. ஆனால் கேரளா, கர்நாடகா உள்பட வெளிமாநிலங்களில் இருந்து நீலகிரிக்கு அரசு பஸ் போக்குவரத்து தொடங்கவில்லை. இருப்பினும் அத்தியாவசிய பணிகளுக்காக இ-பாஸ் பெற்று தமிழகத்துக்குள் வரலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தீவிர கண்காணிப்பு

தமிழகம், கர்நாடகா மற்றும் கேரளா என 3 மாநிலங்கள் சந்திக்கும் இடத்தில் கூடலூர் பகுதி உள்ளது. இந்த நிலையில் கேரளாவில் இருந்து நீலகிரி எல்லையான பாட்டவயல் வரை கேரள மாநில அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. 

இதனால் பாட்டவயல், நாடுகாணி, சோலாடி, நம்பியார்குன்னு உள்பட 10-க்கும் மேற்பட்ட சோதனைச்சாவடியில் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். இதேபோன்று கர்நாடக எல்லையான கக்கநல்லாவிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து இ-பாஸ் பெறாமல் வரும் வாகனங்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்.

சட்ட ரீதியாக நடவடிக்கை

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:- வெளிமாநிலங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு வருவதற்கு இ-பாஸ் கட்டாயம் என்று அரசு தெரிவித்து உள்ளது. எனவே வெளிமாநில பயணிகள் அத்தியாவசிய தேவைக்காக இ-பாஸ் முறையாக பெற வேண்டும். 

அரசின் வழிகாட்டு நெறிமுறையை மீறி கூடலூர் பகுதியில் நுழையக்கூடாது. அவ்வாறு உத்தரவை மீறினால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் மறு உத்தரவு வரும் வரை இதே நடைமுறை அமலில் இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story