வணிகவளாகங்கள், கோவில்கள் திறப்பு; இயல்பு நிலைக்கு திரும்பிய கர்நாடகம்


வணிகவளாகங்கள், கோவில்கள் திறப்பு; இயல்பு நிலைக்கு திரும்பிய கர்நாடகம்
x
தினத்தந்தி 6 July 2021 2:22 AM IST (Updated: 6 July 2021 2:22 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் தளர்வுகள் செய்யப்பட்டது நேற்று அமலுக்கு வந்தது. இதையடுத்து, வணிகவளாகங்கள், கோவில்கள் திறக்கப்பட்டது. இதனால் கர்நாடகம் இயல்பு நிலைக்கு திரும்பியது.

பெங்களூரு: கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்களில் தளர்வுகள் செய்யப்பட்டது நேற்று அமலுக்கு வந்தது. இதையடுத்து, வணிகவளாகங்கள், கோவில்கள் திறக்கப்பட்டது. இதனால் கர்நாடகம் இயல்பு நிலைக்கு திரும்பியது.

தளர்வுகள் அமலுக்கு வந்தது

கர்நாடகத்தில் கொரோனா காரணமாக கடந்த 2 மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து 2 கட்டமாக ஊரடங்கில் தளர்வுகள் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில், 3-ம் கட்டமாக ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் செய்து முதல்-மந்திரி எடியூரப்பா கடந்த 3-ந் தேதி அறிவித்திருந்தார். 

அதாவது வணிகவளாகங்கள் திறப்பது, கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது, திருமண நிகழ்ச்சிகளில் 100 பேர் கலந்து கொள்ள அனுமதி, அரசு போக்குவரத்து கழகங்களில் 100 சதவீத பயணிகள் செல்ல அனுமதிப்பது உள்ளிட்ட பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த தளர்வுகள் நேற்று முதல் வருகிற 19-ந் தேதி அதிகாலை 5 மணி வரை அமலில் இருக்கும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது. 

அதன்படி, நேற்று முதல் பல்வேறு தளர்வுகள் கர்நாடக மாநிலம் முழுவதும் அமலுக்கு வந்தது. இதையடுத்து, பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் நேற்று அதிகாலை 5 மணியில் இருந்து இரவு 9 மணிவரை அனைத்து விதமான கடைகளும் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்றது.

வணிகவளாகங்கள் திறப்பு

குறிப்பாக ஓட்டல்களில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிடுவதற்கு அரசு அனுமதி அளித்திருந்தது. இதையடு்த்து, நேற்று பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் உள்ள ஓட்டல்களில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட்டு சென்றார்கள். மேலும் வணிகவளாகங்கள் 2 மாதத்திற்கு பிறகு நேற்று திறக்கப்பட்டது. 

இதற்காக அனைத்து வணிகவளாகங்களும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு இருந்தது. வணிகவளாகத்திற்கு வந்த வாடிக்கையாளர்களின் உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்பட்டும், கைகளில் கிருமி நாசினி தெளித்தும் உள்ளே செல்வதற்கு அனுமதிக்கப்பட்டார்கள்.

வணிகவளாகத்திற்கு உள்ளேயும் வாடிக்கையாளர்கள் ஒரே இடத்தில் குவியாமல், சமூக இடைவெளியுடன் அமரவும், நின்று கொண்டு இருப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. ஆனாலும் கொரோனா பீதி காரணமாக வணிகவளாகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

 ஊரடங்கில் தளர்வுகள் செய்யப்பட்டதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரினம் செய்து வழிபட்டார்கள். கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டாலும், அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படவில்லை.

இயல்பு நிலை திரும்பியது

இதுபோல், பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ்கள் நேற்று கூடுதலாக இயக்கப்பட்டன. நேற்று 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கே.எஸ்.ஆர்.டி.சி.பஸ்கள் இயக்கப்பட்டன. பெங்களூருவில் 4,500-க்கும் மேற்பட்ட பி.எம்.டி.சி. பஸ்கள் இயக்கப்பட்டது. 

பஸ்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அதுபோல், பெங்களூருவில் மெட்ரோ ரெயில்கள் காலை 7 மணியில் இருந்தே ஓடத்தொடங்கியது. காலை 7 மணியில் இருந்து இரவு 8 மணிவரை மெட்ரோ ரெயில்கள் இயங்கும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் நேற்றில் இருந்து அமலுக்கு வந்திருந்ததால், 2 மாதத்திற்கு பின்பு பெங்களூரு உள்பட கர்நாடக மாநிலம் முழுவதும் இயல்பு நிலைக்கு திரும்பியது. மக்கள் எப்போதும் போல தங்களது பணிகளை மேற்கொண்டனர். 

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருந்தாலும் வருகிற 19-ந் தேதி வரை இரவு 9 மணியில் இருந்து அதிகாலை 5 மணிவரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story