மத்திய மந்திரி ஹர்ஷவர்தனுடன், சுதாகர் சந்திப்பு

டெல்லியில் நேற்று மத்திய மந்திரி ஹர்ஷவர்தனை, சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் சந்தித்து பேசினார். அப்போது கர்நாடகத்திற்கு 1½ கோடி கொரோனா தடுப்பூசி வழங்க அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பெங்களூரு: டெல்லியில் நேற்று மத்திய மந்திரி ஹர்ஷவர்தனை, சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் சந்தித்து பேசினார். அப்போது கர்நாடகத்திற்கு 1½ கோடி கொரோனா தடுப்பூசி வழங்க அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
1½ கோடி கொரோனா தடுப்பூசி
கர்நாடகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இதனால் தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வந்தாலும், போதிய இருப்பு இல்லாத நிலை காரணமாக மக்கள் கொரோனா தடுப்பூசி போட முடியவில்லை. இதையடுத்து, மத்திய அரசிடம் இருந்து கர்நாடகத்திற்கு தேவையான தடுப்பூசியை உடனடியாக பெறும்படி அரசுக்கு, எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தினார்கள்.
இந்த நிலையில், டெல்லியில் நேற்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி மந்திரி ஹர்ஷவர்தனை, கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் சந்தித்து பேசினார். அப்போது கர்நாடகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், கூடுதல் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கும்படி ஹர்ஷவர்தனிடம், சுதாகர் கோரிக்கை வைத்தார். மேலும் கர்நாடகத்திற்கு 1½ கோடி தடுப்பூசி வழங்கும்படியும் அவர் கோரிக்கை வைத்தார்.
தரம் உயர்த்த கோரிக்கை
அத்துடன் பெங்களூரு நிமான்ஸ் மற்றும் கித்வாய் ஆஸ்பத்திரிகளுக்கு, கர்நாடகத்தில் இருந்து மட்டும் அல்லாமல் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நோயாளிகள் சிகிச்சைக்காக வருகிறார்கள். இதனால் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் சில இடையூறுகள் ஏற்படுகிறது. இதன் காரணமாக நிமான்ஸ், கித்வாய் ஆஸ்பத்திரிகளை, 4 பிரிவுகளாக மாற்ற வேண்டும் என்றும் மத்திய மந்திரி ஹர்ஷவர்தனிடம், மந்திரி சுதாகர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் கர்நாடகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு தேவையான நிதியை ஒதுக்கவும், மாநிலத்தில் உள்ள 250 ஆரம்ப சுகாதார நிலையங்களின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கும்படியும் ஹர்ஷவர்தனிடம், மந்திரி சுதாகர் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதவிர மந்திரி ஜல்சக்தி துறை மந்திரி, மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயலை, சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் நேற்று டெல்லியில் சந்தித்து பேசினார்.
ரெயில் திட்டத்தை விஸ்தரிக்க...
அப்போது மத்திய மந்திரி பியூஷ் கோயலிடம், பெங்களூருவில் புறநகர் ரெயில் சேவை மற்றும் மெட்ரோ ரெயில் சேவைக்காக கர்நாடக அரசுக்கு நிதி ஒதுக்கும்படியும், அந்த திட்டங்களை செயல்படுத்த தேவையான உதவிகளை செய்து கொடுக்கும்படியும் மந்திரி சுதாகர் கோரிக்கை விடுத்தார்.
மேலும் பெங்களூரு புறநகர் ரெயில் சேவை மற்றும் மெட்ரோ ரெயில் சேவையை சிக்பள்ளாப்பூர் மாவட்டம் வரை விஸ்தரிக்க வேண்டும் என்றும் மத்திய மந்திரி பியூஷ் கோயலிடம் மந்திரி சுதாகர் கோரிக்கை வைத்து, அதற்கான மனுவையும் கொடுத்தார்.
Related Tags :
Next Story