திண்டுக்கல் நகரின் முக்கிய சாலைகளில் குளம் போல் தேங்கும் மழைநீர்

சமீபத்தில் பெய்த மழையால் திண்டுக்கல் நகரின் முக்கிய சாலைகளில் குளம்போல் மழைநீர் தேங்கியுள்ளது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக மாலை நேரத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. திண்டுக்கல் நகர் பகுதியில் குறைந்தபட்சம் 2 மணி நேரம் மழை கொட்டி தீர்க்கிறது. இதன் காரணமாக நகர் பகுதியில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. மழை பெய்வது நின்றதும் சிறிது நேரத்தில் மழைநீர் வழிந்தோடிவிடும்.
ஆனால் திருச்சி சாலையில் உள்ள மேம்பாலம் அருகில் மற்றும் நகரின் முக்கிய சாலைகள் அமைந்துள்ள இடங்களில் மழைநீர் வழிந்தோட வசதி செய்யப்படவில்லை. இதன் காரணமாக அந்த இடங்களில் வெளியேற முடியாமல் நாள் முழுக்க மழைநீர் தேங்கி நிற்கிறது. இதில் திருச்சி சாலையில் வாகன போக்குவரத்து எப்போதும் இருக்கும். ஆனால் அந்த பகுதியில் மழை பெய்தால் தண்ணீர் வெளியேற முடியாமல் குளம் போல் நாள் முழுக்க தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், தண்ணீர் வழிந்தோட வசதி செய்யப்படாததால் சாலையிலேயே மழைநீர் தேங்கி நிற்கிறது.
ஒரு நாள் அல்லது 2 நாள் கழிந்த பின்னரே மழைநீர் வெளியேறி அருகில் உள்ள காலியிடத்தில் தேங்கி நிற்கும். ஆனால் அதற்குள் மீண்டும் மழை பெய்துவிடுவதால் இந்த சாலையில் எப்போதும் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் எங்கள் பகுதியில் தற்போது கொசுத்தொல்லையும் அதிகரித்துள்ளது. எனவே மழைநீர் வழிந்தோட கால்வாய் வசதி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story