சிறுவன் உள்பட 4 பேர் சிக்கினர்


சிறுவன் உள்பட 4 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 9 July 2021 11:18 PM IST (Updated: 9 July 2021 11:18 PM IST)
t-max-icont-min-icon

போதை ஊசி செலுத்தும் வீடியோ வைரலானதை தொடர்ந்து சிறுவன் உள்பட 4 பேர் போலீசில் சிக்கினர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கோவை

போதை ஊசி செலுத்தும் வீடியோ வைரலானதை தொடர்ந்து சிறுவன் உள்பட 4 பேர் போலீசில் சிக்கினர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

போதை ஊசி

கோவை மாநகரில் இளைஞர்கள், மற்றும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதை ஊசியை விற்பனை செய்த வாலிபர்களை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் வலிநிவாரணிக்காக பயன்படுத்தும் மாத்திரைகளை வாங்கி அதனுடன் தண்ணீர் கலந்து ஊசி மூலமாக உடலில் செலுத்தி போதை அனுபவித்தது தெரியவந்தது.

வலி நிவாரணி மாத்திரைகளை கோவையில் ஒரு கும்பல் ரூ.300 முதல் ரூ.900-ம் வரை விலை வைத்து இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர் களை குறிவைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. 

மேலும் உக்கடம், குறிச்சி, குனியமுத்தூர், போத்தனூர் ஆகிய பகுதிகளில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் இரவு நேரத்தில் கூட்டம், கூட்டமாக கூடும் இளைஞர்கள் போதை ஊசி போட்டுக்கொண்டு போதையில் சுற்றியதும் கண்டு பிடிக்கப்பட்டது. 

வைரலான வீடியோ

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உக்கடம் புல்லுக்காடு பகுதியில் ஏராளமான இளைஞர்கள் ஒன்று கூடி கூட்டமாக அமர்ந்து போதை ஊசி செலுத்திக்கொண்டனர். இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. 

இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க போலீசில் புகாரும் செய்யப்பட்டது. இதையடுத்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் தாமோர் உத்தரவின்பேரில் இந்த கும்பலை சேர்ந்தவர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. 

4 பேர் போலீசில் சிக்கினர் 

தனிப்படையை சேர்ந்த போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினார் கள். இந்த நிலையில் கோவையில் வைரலான வீடியோவில் 7 இளைஞர் கள் அமர்ந்து போதை ஊசி போட்டுக்கொண்டு ஆட்டம் போட்டது தெரியவந்தது. அதில் தனிப்படையை சேர்ந்த போலீசார்  4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். 

அதில் அவர்கள், குனியமுத்தூர் கோவைப்புதூர் பிரிவை சேர்ந்த சாகின் (வயது 19), குனியமுத்தூர் சிறுவாணி டேங்க் பகுதியை சேர்ந்த சாதிக் (21), பிருந்தாவனம் நகரை சேர்ந்த பிரசாந்த் குமார் (21), 18 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. 

ஆனால் அவர்களை போலீசார் கைது செய்ய வில்லை. ரகசிய இடத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:- 

தீவிர விசாாரணை 

போதை ஊசி தொடர்பாக சிக்கிய 4 பேரிடம் வலி நிவாரணி மாத்திரை எப்படி கிடைத்து? இவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் யார்? எப்படி அவர்கள் ஒரே இடத்தில் கூடினார்கள் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

ஏற்கனவே கோவை மாநகர பகுதியில் போதை ஊசியை பயன்படுத்திய வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த செயலில் ஈடுபடும் கும்பலை முற்றிலும் கைது செய்தால்தான் போதை மருந்து கலாசாரத்தை ஒழிக்க முடியும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

பள்ளி வளாகம்

இந்த நிலையில் கோவை சுகுணாபுரம் மலைஅடிவார பகுதியில் பூட்டப்பட்டு உள்ள ஒரு பள்ளி வளாகத்தின் அருகே புதருக்குள் போதை ஊசி மற்றும் மருந்துகள் கிடந்தன. 

அங்கு இந்த கும்பலை சேர்ந்தவர்கள் மறைந்து இருந்து பயன்படுத்தியதாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 


Next Story