ஆட்டை திருடி மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற 2 வாலிபர்கள் கைது


ஆட்டை திருடி மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 10 July 2021 2:42 AM IST (Updated: 10 July 2021 2:42 AM IST)
t-max-icont-min-icon

ஆட்டை திருடி மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள மழவராயநல்லூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் பரமசிவம்(வயது 67). விவசாயியான இவர் 10-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை அவர், தனது ஆடுகளை மேய்த்துவிட்டு வந்து தனது வீட்டிற்கு வெளியே ஆடுகளை விட்டுவிட்டு வீட்டிற்கு உள்ளே சென்று சாப்பிட்டார். பின்னர் வெளியே வந்து ஆடுகளை பட்டியில் அடைப்பதற்கு பார்த்தபோது அதில் ஒரு கிடாவை காணவில்லை.
இது பற்றி அவர் அப்பகுதியில் உள்ளவர்களிடம் கூறியபோது, ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் சேர்ந்து ஆட்டை தூக்கிக்கொண்டு கடம்பூர் சாலை வழியாக சென்றதாக கூறியுள்ளனர். இது குறித்து உடனடியாக விக்கிரமங்கலம் போலீசாருக்கு பரமசிவம் தகவல் தெரிவித்தார். போலீஸ் நிலையத்தில் இருந்த போலீசார் இந்த சம்பவம் குறித்து, கடம்பூர் மருதை ஆற்றுப்பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் ரமேசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர், அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஆட்டுடன் வந்த 2 பேரை மடக்கிப்பிடித்து விசாரித்தார். இதில் அவர்கள் தஞ்சை மாவட்டம் வட சருக்கை கிராமத்தை சேர்ந்த வினோத் (20) மற்றும் அரியலூர் மாவட்டம் கீழராமநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித் (22) என்பதும், மோட்டார் சைக்கிளில் ஆட்டை திருடிச்சென்றதும், தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்த ஆட்டையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்த போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story