ஓமலூர் ஒன்றியக்குழு கூட்டம்: தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வாக்குவாதம்


ஓமலூர் ஒன்றியக்குழு கூட்டம்: தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வாக்குவாதம்
x

ஓமலூர் ஒன்றியக்குழு கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஓமலூர்:
ஓமலூர் ஒன்றியக்குழு கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சாதாரண கூட்டம்
ஓமலூர் ஊராட்சி ஒன்றியக்குழு சாதாரண கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஆனையாளர் திராசுதீன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா, ஒன்றியக்குழு துணைத்தலைவர் செல்வி ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஓமலூர் எம்.எல்.ஏ. மணி மற்றும் தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க. கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் எம்.எல்.ஏ., கவுன்சிலர்கள் பேசியதாவது:-
துரைசாமி (தி.மு.க.):- ஓமலூர் வட்டாரத்தில் 36 வாக்குச்சாவடிகளில் பழுது பார்த்தது, மின் சாதனங்கள் பொருத்தியது என ரூ.5½ லட்சம் செலவிடப்பட்டுள்ளது. தேர்தல் சிறப்பு நிதி வந்திருக்கும் நிலையில், ஒன்றிய பொது நிதியிலிருந்து ஏன் செலவு செய்தீர்கள்?. தேசிய ஊரக வேலை திட்டத்தில் தும்பிபாடி, ரெட்டியூரில் பேவர் பிளாக் அமைக்கும் பணி செய்யாமலேயே தலா ரூ.12 லட்சம் வீதம் செலவழிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
பெண் கவுன்சிலர்களின் கணவர்கள்
குப்புசாமி (தி.மு.க.):- பெரியேரிப்பட்டி ஊராட்சியில் தார்சாலையை அகற்றி கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளதா?.
மணி எம்.எல்.ஏ.:- அத்தியாவசிய தேவை என்றால் தார்சாலையை அகற்றி விட்டு கான்கிரீட் சாலை அமைக்கலாம்.
சிவஞானவேல் (தி.மு.க.):- ஒன்றிக்குழு கூட்டத்தில் எம்.எல்.ஏ. பார்வையாளராக மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். கவுன்சிலர்களுடன் விவாதம் செய்யக்கூடாது.
மணி எம்.எல்.ஏ.:- மக்கள் பிரச்சினைகளை யார் வேண்டுமானாலும் பேசலாம். 
இவ்வாறு விவாதம் நீடித்தது.
இந்தநிலையில், தி.மு.க. பெண் கவுன்சிலர்களின் கணவர்களான மணிவாசகம், ராஜா, அருண்பாலாஜி, தனசேகர் ஆகியோர் கூட்ட அரங்கிற்கு வந்து, தங்கள் பகுதியில் செய்ய வேண்டிய பணிகள், கோரிக்கைகள் குறித்து தெரிவித்தனர். அப்போது மணி எம்.எல்.ஏ., ஒன்றியக்குழு தலைவர் ராஜேந்திரன், ஆணையாளர் திராசுதீன் ஆகியோர் கோரிக்கைகளை மனுக்களாக எழுதி கொடுக்கும்படி கூறினர்.
வாக்குவாதம்-பரபரப்பு
அப்போது தி.மு.க. கவுன்சிலர் சிவஞானவேல் கூட்டத்தில் எம்.எல்.ஏ. விவாதம் செய்யக்கூடாது என்றார். இதனால் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கோவிந்தராஜ், சரவணன் ஆகியோர், கவுன்சிலர்களின் கணவர்கள் கூட்டத்தில் விவாதம் செய்கின்றனர். எனவே, மக்கள் பிரச்சினையை யார் வேண்டுமானாலும் பேசலாம் என்றனர். இதனால் தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து ஒன்றியக்குழு தலைவர் ராஜேந்திரன் கவுன்சிலர்களை சமாதானம் செய்தார். பின்னர் கூட்டம் முடிந்து அனைவரும் கலைந்து சென்றனர். ஒன்றியக்குழு கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் நேற்று ஒன்றிய அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story