ஆன்லைன் கல்வி ரேடியோ மூலம் பாடம் நடத்தும் அரசு பள்ளி ஆசிரியர்கள்

ஆன்லைன் கல்வி ரேடியோ மூலம் பாடம் நடத்தும் அரசு பள்ளி ஆசிரியர்கள்
பொள்ளாச்சி
கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறப்பது கடந்த ஒராண்டாக தள்ளி போகிறது. இதன் காரணமாக ஆன்லைன்கல்வி தொலைக்காட்சி மூலம் மாணவ-மாணவிகளுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இதுபோன்ற ஊரடங்கு காலத்திலும், அசாதாரண சூழ்நிலையிலும் மாணவர்களின் கற்றல் தடைபடாமல் இருக்க ஆன்லைன் கல்வி ரேடியோ மூலம் 1 முதல் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்துகின்றனர்.
தமிழகத்தை சேர்ந்த 75 அரசு பள்ளி ஆசிரியர்கள், தன்னார்வ கூட்டு முயற்சியுடன் இதை செயல்படுத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி வடக்கு ஆசிரியை கீதா, ஸ்ரீதேவி, வகிதா, இளமதி, ரஜினி, கனகலட்சுமி ஆகியோரும் இக்குழுவில் இணைந்து தங்கள் பாடங்களை அனுப்பி வருகின்றனர்.
கல்வி வானொலி நிகழ்ச்சிகளை இணையதளம் மூலம் கேட்கலாம். இதுகுறித்து ஏரிப்பட்டி அரசு பள்ளி அறிவியல் ஆசிரியை கீதா கூறியதாவது:-
ஆன்லைன் கல்வி ரேடியோவை கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர் கார்த்திக்ராஜா என்பவர் முதலில் தொடங்கினார். இந்த வானொலிக்கு தமிழகத்தில் உள்ள கோவை உள்பட அனைத்து மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்களும் பாடம் நடத்துவதை ஆடியோ பதிவு செய்து அவருக்கு அனுப்பி வருகிறோம். அதை அவர் ரேடியோவில் ஒலிப்பரப்புகிறார்.
இதற்காக கோவை மாவட்ட அளவில் டெலிகிராம் குழு உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவில் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் உள்பட 6 ஆயிரம் பேர் உள்ளனர்.
கல்வி ரேடியோவில் தினமும் எந்த நேரத்தில் எந்த பாடம் ஒலிப்பரப்பப்படுகிறது என்பது குறித்த தகவலை அந்த குழுவில் ஆசிரியர்கள் பதிவு செய்கின்றனர். இதை பயன்படுத்தி மாணவ-மாணவிகள் பாடங்களை கேட்டு புரிந்து கொள்கின்றனர்.
யூடீயூப் வீடியோக்களின் இடையே தேவையில்லாத விளம்பரங்கள் வரும். ஆனால் இதில் எந்த விளம்பரமும் இடையில் ஒலிப்பரப்படாது. இதனால் குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. கல்வி ரேடியோ கேட்க குறைந்தபட்ச பேசிக் செல்போன் போதுமானது.
அதிக டேட்டா தேவைப்படாது. குறைந்தபட்சம் 2 ஜி வேகத்திலேயே இயங்கும். மலைப்பகுதியில் நெட்வொர்க் பிரச்சினை காரணமாக மாணவ-மாணவிகள் ஆன்லைன் மூலம் கல்வி கற்பது சிரமமாக உள்ளது. இந்த பிரச்சினை ஆன்லைன் கல்வி ரேடியோவில் கிடையாது.
மலை கிராமங்களிலும் இயங்க ஏதுவாக உள்ளது. இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கும் என நற்சிந்தனைகள், கதைகள், சொல்வங்கி, ஆங்கில இலக்கணம், அறிவுக்களஞ்சியம், குறள், விடுகதை, பழமொழி, புத்தகத்தில் உள்ள பாடங்கள், வினா விடை ஆகியவை ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்
திங்கட்கி ழமை தமிழ், செவ்வாய் ஆங்கிலம், புதன் கணிதம், வியாழன் அறிவியல், வெள்ளி சமூக அறிவியல் என ஒலிப்பரப்பப்படுகிறது.
பிளே லிஸ்ட் இருப்பதால் கேட்க தவறியவர்கள் மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை கேட்கலாம்.
கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரைக்கும் 3 லட்சம் பேர் ஆன்லைன் கல்வி ரேடியோவில் பாடங்களை கேட்டு உள்ளனர்.
இந்த மாதம் முதல் வாரத்தில் மட்டும் ஒரு லட்சம் மாணவ-மாணவிகள் இந்த கல்வி ரேடியோவில் பாடங்களை கேட்டு உள்ளனர்.
நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து கேட்க வேண்டிய அவசியம் இல்லை. மாணவமாணவிகள் மற்ற வேலைகளை செய்து கொண்டு இதை கேட்கலாம். இந்த நிலையில் கடந்த மே மாதம் சிறப்பு செயல்படாக காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மின் மினிகள், மின்ணும் நேரத்தில் மாணவர்கள் 100 என்ற தலைப்பில் போட்டி நடத்தப்பட்டது.
இதற்கு திருக்குறள், அறிவியல் வினா விடை ஆத்திச்சூடி, கொன்னறை வேந்தன் புதிய ஆத்திச்சூடி ஆகியவற்றிற்கு விளக்கங்கள் எழுதியும், பேசியும் மாணவமாணவிகள் ஆசிரியர்களுக்கு வாட்ஸ்அப் மூலமாக அனுப்பினார்கள். பின்னர் அதை திருத்தி கல்வி வானொலிக்கு அனுப்பப்பட்டு ஒலிப்பரப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும், சான்றிதழம் வழங்கப்பட்டது.
ஏரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் மணிகண்டீஸ்வரி, பிரதிக்ஷா, பிரியதர்ஷினி, துர்காஸ்ரீ, நர்மதா ஆகியேருக்கும் பொள்ளாச்சி கல்வி மாவட்ட அலுவலர் கண்ணிச்சாமி, துணை ஆய்வாளர் ஜெயச்சந்திரன், தொடக்கல்வி அலுவலர் சின்னப்பராஜ், ஆசிரியை கீதா ஆகியோர் வழங்கினார்கள்.
இதேபோன்று ராமபட்டிணம் பள்ளி மாணவிகள் அனுஸ்ரீ, யுவஸ்ரீ ஆகியோருக்கும் கேடயமும், சான்றிதழும் வழங்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story