கேரளாவுக்கு கடத்த முயன்ற 17 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
திப்பம்பட்டியில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 17 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பதுக்கி வைத்த குடோனுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டதுடன், வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி
திப்பம்பட்டியில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 17 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பதுக்கி வைத்த குடோனுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டதுடன், வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ரேஷன் அரிசி
பொள்ளாச்சி அருகே திப்பம்பட்டியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான குடோன் உள்ளது. இந்த குடோனில் ரேஷன் அரிசியை பதுக்கி கேரளாவுக்கு கடத்துவதாக சப்-கலெக்டர் அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் பேரில் சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் தலைமையில் குடிமைப்பொருள் தனி தாசில்தார் அருள்முருகன், வருவாய் ஆய்வாளர் பிரேமா, கிராம நிர்வாக அலுவலர் குணா ஆகியோர் அங்கு சென்றனர்.
அப்போது நுழைவு வாயில் பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து அதிகாரிகள் கேட் மீது ஏறி உள்ளே குதித்தனர். பின்னர் நுழைவு வாயில் திறக்கப்பட்டு, சப்-கலெக்டர் வாகனம் குடோனுக்கு உள்ளே வந்தது.
இதை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் நாலாபுறமும் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர். அதில் ஒருவர் அதிகாரிகளிடம் சிக்கினார்.
போலி ரசீதுகள்
அவரிடம் நடத்திய விசாரணையில் பொள்ளாச்சி மார்க்கெட் ரோடு செரீப் காலனியை சேர்ந்த முகமது தவுபிக் (வயது 31) என்பது தெரிய வந்தது. மேலும் அவர் இந்த குடோனை வாடகைக்கு எடுத்து கேரளாவுக்கு தினமும் ரூ.4 லட்சத்துக்கு ரேஷன் அரிசியை கடத்தியது தெரியவந்தது.
உடனே அதிகாரிகள் குடோன் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. மேலும் போலியாக தயார் செய்யப் பட்ட அரிசி பைகளும் குவித்து வைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
17 டன் பறிமுதல்
பின்னர் சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் அரிசி மூட்டைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அங்கிருந்து போலி ரசீதுகள், கணினி, எடை எந்திரம் உள்ளிட்ட பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 17 டன் ரேஷன் அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 சரக்கு வாகனங்கள், மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அந்த குடோனுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
கைது
இதுகுறித்து கோமங்கலம் போலீசாருக்கும், உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, போலீசார் விரைந்து வந்தனர்.
அவர்களிடம் பிடிபட்ட முகமது தவுபிக்கை வருவாய்த்துறை அதிகாரிகள் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story