காமராஜர் நினைவு இல்லத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை


காமராஜர் நினைவு இல்லத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை
x
தினத்தந்தி 16 July 2021 12:56 PM GMT (Updated: 16 July 2021 12:56 PM GMT)

காமராஜர் பிறந்தநாளையொட்டி காமராஜர் நினைவு இல்லத்தில் அரசியல் கட்சித்தலைவர்கள் நேற்று மரியாதை செலுத்தினர்.

சென்னை,

பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளையொட்டி சென்னை தியாகராயநகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் முன்னாள் அமைச்சர் க.பாண்டியராஜன், மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ. உள்பட நிர்வாகிகள் காமராஜர் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். அவருடன் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் மற்றும் நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர். அதேபோல முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பெஞ்சமின் ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.

பா.ஜ.க. - காங்கிரஸ்

தமிழக பா.ஜ.க. துணைத்தலைவர் எம்.என்.ராஜா தலைமையில் பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், வக்கீல் பிரிவு தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ், மாநில செயலாளர்கள் கே.எஸ்.ஜெயராமன், ஏ.செல்வகுமார் உள்பட நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். அவருடன் தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், பா.ஜ.க. செயற்குழு உறுப்பினர் ம.பொ.சி. மாதவி பாஸ்கரன், ம.பொ.சி.செந்தில் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் பொறுப்பாளர் தினேஷ்குண்டுராவ், முன்னாள் தலைவர்கள் கே.வி.தங்கபாலு, திருநாவுக்கரசர், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, பொதுச்செயலாளர்கள் சிரஞ்சீவி, தமிழ்செல்வன், தளபதி பாஸ்கர் உள்பட நிர்வாகிகள் காமராஜர் சிலைக்கு மரியாதை செலுத்தினர். சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த கொட்டிவாக்கம் முருகன், கக்கன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

த.மா.கா. - தே.மு.தி.க.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் பொதுச்செயலாளர் விடியல் சேகர், தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், மாவட்ட தலைவர் சைதை மனோகரன் உள்ளிட்டோர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத்தொடர்ந்து ‘காமராஜ்’ திரைப்பட இயக்குனர் அ.பாலகிருஷ்ணன் படைப்பில் ‘காமராஜர் பொக்கிஷம் - மாணவர்களுக்காக...’ எனும் புத்தகத்தை ஜி.கே.வாசன் வெளியிட்டார்.

தே.மு.தி.க. மாநில வர்த்தகரணி செயலாளர் எஸ்.எஸ்.எஸ்.யு.சந்திரன், இளைஞரணி துணை செயலாளர்நடிகர் ராஜேந்திரநாத் உள்பட நிர்வாகிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் ந.செல்லதுரை, வி.கோ.ஆதவன், ஆர்.செல்வம் உள்பட நிர்வாகிகளும் காமராஜர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

119 கிலோ லட்டு

தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் காங்கிரஸ் ஆர்.டி.ஐ. பிரிவு துணைத்தலைவர் மயிலை தரணி உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

சமத்துவ மக்கள் கட்சி பொருளாளர் ஏ.என்.சுந்தரேசன் தலைமையில் என்.சுந்தர், பாலகிருஷ்ணன், ஷோபிதாராணி உள்பட நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். சமத்துவ மக்கள் கழக மாவட்ட செயலாளர் சுபாஷ் ஏற்பாட்டில் 119 கிலோ எடையில் செய்யப்பட்ட ராட்சத லட்டுவை, கட்சியின் நிறுவனர் எர்ணாவூர் நாராயணன் வெட்டி அனைவருக்கும் வழங்கினார்.

நாடார் சங்கங்கள்

தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் ஜெ.முத்துரமேஷ் நாடார், இந்திய நாடார் சங்கத்தலைவர் கு.ராமராஜ், இந்திய நாடார் பேரமைப்பு நிறுவன தலைவர் ராகம் சவுந்தரபாண்டியன், கோவை மாவட்ட நாடார்கள் சங்கத்தலைவர் சுரேஷ்மாறன், தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் த.ரவி, திருவல்லிக்கேணி வியாபாரிகள் சங்க தலைவர் கே.சி.ராஜா, எம்.கே.பி. நகர் வியாபாரிகள் சங்க தலைவர் பி.செந்தில்முருகன், நாடார் ஆராய்ச்சி பவுண்டேஷன் பொதுச்செயலாளர் எஸ்.பாலகிருஷ்ணன், மண்டல தலைவர் வி.எஸ்.பொன்ராஜ், அகில இந்திய நாடார் வணிகர்கள் பேரமைப்பு நிறுவன தலைவர் ஏ.தர்மராஜ், பொதுச்செயலாளர் ஆ.ஆறுமுகநயினார், அகில இந்திய நாடார் மகாஜன சபை தலைவர் கே.எஸ்.எம்.கார்த்திகேயன், அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் தேசிய தலைவர் இசக்கிமுத்து, தமிழ்நாடு இளைஞர்கள் சங்க மாநிலத்தலைவர் எம்.எம்.ஆர்.மதன், பெருந்தலைவர் மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் (சிலம்பாட்டக்குழு) து.ரசல்ராஜ், ஜனநாயக ஜனதா தளம் தலைவர் டி.ராஜகோபால், உள்ளிட்டோரும் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

காமராஜர் பேத்திகள்

அமெட் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் நாசே ஜெ.ராமச்சந்திரன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, சினிமா சண்டை பயிற்சியாளர் ஜாகுவார் தங்கம், காமராஜர் பேத்திகள் கமலிகா காமராஜர், மயூரி உள்பட பலரும் காமராஜர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

தமிழ்நாடு நாடார் சங்கம் சார்பில் ஏழை-எளியோர் 119 பேருக்கு 10 கிலோ அரிசி மூட்டை, மளிகை பொருட்கள், ஓமியோபதி மருந்துகள், முக கவசம் வழங்கப்பட்டது. மத்திய அரசின் புதிய கல்வி திட்டத்துக்கு காமராஜர் பெயர் சூட்டக்கோரி தனி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதேபோல பல்வேறு அமைப்புகள் சார்பில் நலத்திட்ட உதவிகளும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

வைகோ

சென்னை கிண்டி கத்திப்பாராவில் உள்ள காமராஜர் சிலைக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கட்சியின் ஆட்சி மன்றக்குழு செயலாளர் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், மாவட்ட செயலாளர்கள் சு.ஜீவன், டி.சி.ராஜேந்திரன் உள்பட நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர்.

தாம்பரம் பூண்டிபஜாரில் உள்ள காமராஜர் சிலைக்கு நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னல் எச்.ஸ்டீபன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

சென்னை கோயம்பேடு மலர் அங்காடியில் உள்ள காமராஜர் உருவப்படத்துக்கு தேசிய நாடார் சங்க பொதுச்செயலாளர் டி.விஜயகுமார், புத்தூர் கட்டு நிபுணர் ஆர்.எஸ்.வேலுமணி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Next Story