தொழிலாளியை அரிவாளால் வெட்டிய அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் கைது

திருவாரூர் அருகே குளத்தில் மீன் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை அரிவாளால் வெட்டிய அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர்:
திருவாரூர் அருகே குளத்தில் மீன் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை அரிவாளால் வெட்டிய அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலரை போலீசார் கைது செய்தனர்.
மீன் பிடித்து விற்பனை
திருவாரூர் அருகே புதுப்பத்தூர் கிராமத்தில் ஊராட்சிக்கு சொந்தமான குளம் ஒன்று உள்ளது. ஆண்டுதோறும் இந்த குளத்தில் அந்த கிராம மக்கள் மீன் பிடித்து விற்பனை செய்து அதில் கிடைக்கும் பணத்தில் கிராமத்திற்கு தேவையான பொதுவான செலவிற்கு பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு அதே பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. ஒன்றிய பொருளாளரும், ஒன்றிய கவுன்சிலருமான நடராஜன்(வயது 48) அந்த குளத்தை தனது ஆக்கிரமிப்பில் வைத்து கொண்டதாகவும், வேறு யாரும் அந்த குளத்தில் மீன் பிடிக்க அனுமதிக்கவில்லை என்றும் தெரிகிறது.
தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு
இந்த நிலையில் நேற்று புதுப்பத்தூர் வடக்கு தெருவை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளி வீரையன்(55) என்பவர் குளத்தில் இறங்கி மீன் பிடித்து உள்ளார். அப்போது அங்கு வந்த அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் நடராஜன், யாரை கேட்டு குளத்தில் மீன் பிடிக்கிறாய்? இந்த குளம் என்னுடையது என்று கூறி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றியதில் நடராஜன் அரிவாளை எடுத்து வீரையனின் கையில் வெட்டியுள்ளார். அக்கம் பக்கத்தினர் அங்கு ஒடி வந்து அரிவாள் வெட்டுப்பட்ட வீரையனை மீட்டு சிசிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள வீரையனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வீடு-வாகனங்கள் சேதம்
இதுகுறித்து தகவல் அறிந்த திருவாரூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீசார் வருவதற்குள் வீரையனின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நடராஜன் வீடு மற்றும் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த டிராக்டர் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை அடித்து உடைத்து சேதப்படுத்தினர்.
இதனையடுத்து அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர். போலீசார் பொதுமக்கள் கூட்டத்தை அப்புறப்படுத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் கைது
தகவல் அறிந்த திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை செய்தார். இதனையடுத்து திருவாரூர் தாலுகா போலீசார் கொலை முயற்சி, தகாத வார்த்தையால் திட்டுதல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் நடராஜனை கைது செய்தனர்.
புதுபத்தூர் கிராமத்தில் மேலும் அசம்பாவித சம்பவம் எதுவும் நடக்காமல் தடுக்க 50-க்கும் மேற்பட்ட போலீசார் தொடர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பரபரப்பு
இந்த நிலையில் நடராஜன் வீட்டில் இருந்த டிராக்டர் மற்றும் வாகனங்களை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவருடைய உறவினர்கள் திருவாரூர் தாலுகா போலீசில் புகார் செய்துள்ளனர்.
கிராம குளத்தில் மீன் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை அரிவாளால் வெட்டிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story