திருச்சி துவாக்குடி ஓ.எப்.டி. தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ‘ரிமோட் கண்ட்ரோல்’ துப்பாக்கிகள் கடற்படையிடம் ஒப்படைப்பு


திருச்சி துவாக்குடி ஓ.எப்.டி. தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ‘ரிமோட் கண்ட்ரோல்’ துப்பாக்கிகள் கடற்படையிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 18 July 2021 1:01 AM IST (Updated: 18 July 2021 1:01 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி துவாக்குடி ஓ.எப்.டி. தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ரிமோட் கண்ட்ரோல் துப்பாக்கிகள் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டன.

திருவெறும்பூர்,

திருச்சி துவாக்குடி ஓ.எப்.டி. தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ரிமோட் கண்ட்ரோல் துப்பாக்கிகள் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டன.

‘ரிமோட் கண்ட்ரோல்’ துப்பாக்கி

திருச்சி அருகே துவாக்குடி பகுதியில் படைக்கல தொழிற்சாலை (ஓ.எப்.டி.) 1966-ம் ஆண்டு முதல் செயல் பட்டு வருகிறது. இங்கு முப்படைகளுக்கும், மத்திய மற்றும் மாநில போலீசாருக்கும் பல்வேறு ரக துப்பாக்கிகள் உற்பத்தி செய்து அனுப்பி வைக்கப்படுகின்றன. 

இந்தநிலையில் ஆத்மா நிர்பார் திட்டத்தின் ஒரு பகுதியாக 12.7 எம்.எம் நிலைப்படுத்தப்பட்ட தொலை கட்டுப்பாட்டு துப்பாக்கியை உள்நாட்டில் தயாரிக்கும் ஒருங்கிணைப்பு தொழிற்சாலையாக, தற்போது இந்த தொழிற்சாலை வளர்ச்சி அடைந்துள்ளது. இதற்காக படைக்கல தொழிற்சாலையில் தொலை கட்டுப்பாட்டு துப்பாக்கியை உற்பத்தி செய்யும் தளம் மற்றும் சோதனை வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. 

கடற்படையிடம் ஒப்படைப்பு

மேலும் இந்த துப்பாக்கி அமைப்பு இஸ்ரேல் நாட்டின் எல்.பில். சிஸ்டம் நிறுவனத்திடம் இருந்து தொழில்நுட்ப பகிர்ந்துணர்வு ஒப்பந்தம் மூலம் பெறப்பட்டது. அதன் அடிப்படையில் கடற்படைக்காக இங்கு 12.7எம்எம் எம்2 நேட்டோ துப்பாக்கி முதற்கட்டமாக 10 எண்ணம் தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த துப்பாக்கிகள் பாதுகாப்பு அமைச்சக குழுவினரால் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. 

இதைத்தொடர்ந்து அந்த துப்பாக்கிகள் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படை வசம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று ஓ.எப்.டி. வளாகத்தில் நடைபெற்றது. அவற்றை ஓ.எப்.டி. சேர்மன் விஸ்வகர்மா கடற்படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். 

துல்லியமாக சுடமுடியும்

இந்த துப்பாக்கியை கப்பல்களின் மேல் பகுதியில் பொருத்தி, கப்பலின் உள்ளே இருந்து ரிமோட் மூலம் இயக்கலாம். பகல் மற்றும் இரவில் இயங்கக்கூடிய சாதனங்களை கொண்ட சிறிய, பெரிய படகுகளில் பொருத்தலாம். இந்த துப்பாக்கியில் கண்காணிப்பு கேமரா, தெர்மல் இமேஜர், லேசர் ரேஞ்ச் பைண்டர் போன்றவை இணைக்கப்பட்டுள்ளது. 

இதனால் இரவிலும், பகலிலும் எதிரிகளின் நடமாட்டத்தை கண்காணித்து, இலக்கை துல்லியமாக கண்டறிந்து குறிபார்த்து 2 கிலோ மீட்டர் தூரம் வரை சுடமுடியும். இந்த துப்பாக்கி பயன்பாட்டுக்கு வந்தால் நமது நாட்டில் கடல் வழி பாதுகாப்பு மேலும் பலப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story