குவிந்த சுற்றுலா பயணிகள்

உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலையில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
தளி
உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலையில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
பஞ்சலிங்க அருவி
உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தி திருமூர்த்திமலை உள்ளது. அடிவாரத்தில் இருந்து 750 மீட்டர் உயரத்தில் உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி உள்ளது. அதில் விழுகின்ற மூலிகை தண்ணீரில் குளித்து புத்துணர்வு பெறுவதற்கும். இயற்கை சூழலை ரசிப்பதற்கும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அடிவாரப்பகுதியில் பாலாற்றின் கரையில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய கடவுள்கள் ஒரே குன்றில் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.
கோவிலுக்கு வருகின்ற வழியில் பூங்கா, படகு இல்லம், நீச்சல் குளம், வண்ணமீன் காட்சியகம், சிறுவர் பூங்கா உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. இதனால் உடுமலை பகுதி சிறந்த சுற்றுலா மற்றும் ஆன்மிக தலமாக திருமூர்த்திமலை விளங்கி வருகிறது. கொரோனா 2வது அலை கட்டுக்குள் வந்ததால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
சாமி தரிசனம் செய்ய அனுமதி
அதன்படி கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதையடுத்து திருமூர்த்தி மலைக்கு பக்தர்கள் வந்து மும்மூர்த்திகளை தரிசனம் செய்த வண்ணம் உள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் திருமூர்த்திமலைக்கு வருகை தந்தனர்.
பஞ்சலிங்க அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் கோவில் அருகே ஓடுகின்ற பாலாற்றின் கரையில் குளித்து மகிழ்ந்தனர். அதைத்தொடர்ந்து மும்மூர்த்திகளை தரிசனம் விட்டு திரும்பிச் சென்றனர். அப்போது காண்டூர் கால்வாய் மற்றும் அணைப்பகுதியில் குடும்பத்துடன் அமர்ந்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
அத்துமீறும் சுற்றுலா பயணிகள்
இதற்கிடையில் ஒரு சில சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் திருமூர்த்தி அணைக்கு சென்று குளித்த வண்ணமிருந்தனர். அணைக்குள் அபாயகரமான பகுதிகள் நிறைந்துள்ளதால் அங்கு குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்தும் அறிவிப்பு பதாகையும் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளது. அதை கண்டுகொள்ளாமல் சுற்றுலா பயணிகள் அணையில் இறங்கி குளித்தவாறு உள்ளனர்.
இதனால் உயிர் இழப்புகள் ஏற்படும் சூழல் உள்ளது. திருமூர்த்தி அணையின் கரையில் அமைக்கப்பட்டுள்ள கம்பி வேலியில் கோவிலுக்கு அருகே சேதம் ஏற்பட்டுள்ளது. அதன் வழியாகத்தான் சுற்றுலாப் பயணிகள் அணைக்குள் சென்ற வண்ணம் உள்ளனர். எனவே கம்பிவேலியில் சேதமடைந்த பகுதிகளை அதிகாரிகள் சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் உயிர் இழப்புகள் ஏற்படுவதை தடுக்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story