ஊராட்சி பகுதிகளை மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு

ஊராட்சி பகுதிகளை மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி
மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. திருச்சி மாநகரில் உள்ள மாதவப்பெருமாள் கோவில், பிச்சாண்டார் கோவில், முத்தரசநல்லூர், மருதாண்டக்குறிச்சி, மல்லியம்பத்து உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் உள்ள 150 ஏக்கருக்கு மேலான பகுதிகள் மாநகராட்சியாக விரிவாக்கம் செய்யப்படும் என்றும், அதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
தங்களுடைய பகுதியை ஊராட்சியில் இருந்து மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 10-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.
கலெக்டரிடம் மனு
திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகளாக உள்ள பகுதிகளை தரம் உயர்த்தி 100 வார்டுகளாக மாற்ற திட்டமிட்டால் தங்களுடைய பகுதிகளுக்கு அதிக வரி கட்ட வேண்டும். 100 நாள் வேலைத்திட்டம் பறிபோகும். கிராமத்திட்டத்தின் கீழ் வீடுகள் கட்ட முடியாது. அரசின் பல்வேறு சலுகைகள் பறிபோகும்.
ஏற்கனவே திருவெறும்பூர், துவாக்குடி, காட்டூர் உள்ளிட்ட பகுதிகள் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டும் சாலை வசதிகள், தெருவிளக்கு வசதிகள் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் தரம் உயர்த்தப்படாமல் உள்ள நிலையில், தங்களுடைய பகுதிகளை மாநகராட்சியாக தரம் உயர்த்துவதால் எந்த பலனும் கிடைக்காது என கூறினர். பின்னர் இதுகுறித்து கலெக்டரிடம் மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனர்.
ஊக்கத்தொகை
திருச்சி திருவெறும்பூர் கீழகுறிச்சி அண்ணாநகர் மேற்கு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், "கீழகுறிச்சி அண்ணாநகர் மேற்கு பகுதியில் ராணி மங்கம்மாள் காலத்து மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தை தனியார் இடிக்க முயற்சித்தபோது, கிராம மக்கள் தடுத்து விட்டார்கள். ஆகவே புராதன அருங்காட்சியகமாக பாதுகாக்கப்பட வேண்டிய ராணி மங்கம்மாள் கோட்டையை தொல்பொருள் ஆராய்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும்"என்று கூறப்பட்டு இருந்தது. பூஜாரிகள் பேரமைப்பு மாவட்ட தலைவர் அல்லிமுத்து தலைமையில் நிர்வாகிகள் கொடுத்த மனுவில், கிராமம் மற்றும் நகர் பகுதியில் பூஜை செய்து வரும் அரசின் ஒருகால பூஜை திட்டத்தில் பயன் அடையாத பூஜாரிகள் ஆயிரக்கணக்கானோர் தற்போது உள்ள அரசாணைப்படி கொரோனா நிவாரண நிதி பெற முடியாத நிலை உள்ளது. கோவில்களில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பரம்பரை மற்றும் ஆன்மீக ஈடுபாடுடன் பூஜை சேவைப் பணியாற்றி வரும் பூஜாரிகளுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.
வீட்டுமனைப்பட்டா
தமிழ்புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் ரமணா தலைமையில் நிர்வாகிகள் கொடுத்த மனுவில், திருவெறும்பூர் ஊராட்சிக்குட்பட்ட வேங்கூர் பகுதியில் உள்ள கலைஞர் காலனி, ஆர்.எஸ்.நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். மேலும், அந்த பகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று கூறி இருந்தனர். இதேபோல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பலர் மனு அளித்தனர். இந்த மனுநீதி முகாமில் வாட்ஸ்-அப் செயலி மற்றும் மனுப் பெட்டிகள் மூலம் மொத்தம் 622 மனுக்கள் பெறப்பட்டன.
Related Tags :
Next Story