மாவட்ட செய்திகள்

அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு + "||" + Special worship in Amman temples

அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
ஆடி முதல் செவ்வாய்க்கிழமையான நேற்று அம்மன் கோவில்களில் பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தினார்கள்.
மணவாளக்குறிச்சி:
ஆடி முதல் செவ்வாய்க்கிழமையான நேற்று அம்மன் கோவில்களில் பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தினார்கள். 
ஆடி செவ்வாய்
தமிழகத்தில் ஆடி மாதம் வந்து விட்டாலே அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதிலும் குமரி மாவட்டத்தில் ஆடி மாதம் செவ்வாய்க்கிழமைகளில் தான் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
அதன்படி ஆடி மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமையான நேற்று கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், நாகர்கோவில் வடிவீஸ்வரம் அழகம்மன் கோவில், நடுகாட்டு இசக்கியம்மன் கோவில், வடசேரி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில்  உள்பட அம்மன் கோவில்களில் அரசு விதித்த கட்டுப்பாடுகளுடன் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
அவ்வையார் அம்மன் கோவில்
செண்பகராமன்புதூர் அருகே உள்ள அவ்வையார் அம்மன் கோவிலுக்கு பக்தர்கள் திரண்டு வந்து அம்மனுக்கு கூழ், கொழுக்கட்டை படைத்து வழிபாடு நடத்துவது சிறப்பு அம்சமாகும். இதற்காக குமரி மாவட்டம் மட்டுமல்லாமல் அண்டை மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி மற்றும் அண்டை மாநிலமான கேரளாவிலிருந்தும் ஏராளமானோர் வந்து அவ்வையார் அம்மன் கோவில் வளாகத்திலேயே கொழுக்கட்டை மற்றும் கூழ் தயார் செய்து அம்மனுக்கு வழிபாடு நடத்துவது வழக்கம்.
ஆனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளதால், அவ்வையார் அம்மன் கோவிலில் கொழுக்கட்டை அவித்து படைக்க தடை விதிக்கப்பட்டது. ஆனால் பக்தர்கள் அம்மனை தரிசிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனால் நேற்று அவ்வையார் அம்மன் கோவிலில் வழக்கத்திற்கு மாறாக கூட்டம் குறைவாகவே இருந்தது. வந்த பக்தர்கள் நேராக அலங்கரிக்கப்பட்ட அவ்வையார் அம்மனை வரிசையாக தரிசனம் செய்துவிட்டு சென்றனர். 
கொழுக்கட்டை
தக்கலை பகுதியில் இருந்து வாகனத்தில் வந்தவர்கள் அவ்வையார் அம்மனுக்கு படைப்பதற்காக கூழ் மற்றும் கொழுக்கட்டைக்கான பொருட்களை கொண்டு வந்தனர். ஆனால் கோவில் வளாகத்தில் கொழுக்கட்டை மற்றும் கூழ் செய்து படைக்க கோவில் நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை. 
அதனால் அவர்கள் தடையை மீறி கோவில் அருகே உள்ள தோப்புகளில் கொழுக்கட்டை மற்றும் கூழ் தயார் செய்தனர்.  பின்னர் அவர்கள் அங்கேயிருந்த படியே அம்மனை வழிபட்டனர்.
கூட்டம்
மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
அவர்கள் பஜனை பாடி ஆலயத்தின் வெளி பிரகாரத்தை சுற்றி வந்து அம்மனை வழிபட்டனர். இதனால் நேற்று கோவில் வளாகம், கடற்கரை பகுதியிலும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.
முப்பந்தல்
முப்பந்தல் இசக்கி அம்மன் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பக்தர்கள் சமூக இடைவெளியுடன் அம்மனை தரிசனம் செய்தனர்.
முப்பந்தல் ஆலமூடு அம்மன் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.