கல்லூரிகள் இணைப்பின் மூலம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு விடியல் வந்துவிட்டது அரசின் முடிவுக்கு பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பு வரவேற்பு


கல்லூரிகள் இணைப்பின் மூலம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு விடியல் வந்துவிட்டது அரசின் முடிவுக்கு பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பு  வரவேற்பு
x
தினத்தந்தி 21 July 2021 4:46 PM GMT (Updated: 21 July 2021 4:46 PM GMT)

கல்லூரிகள் இணைப்பின் மூலம் அண்ணா மலை பல்கலைக்கழகத்துக்கு விடியல் வந்துவிட்டது என்று கூறி அரசின் இந்த முடிவை பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் வரவேற்றுள்ளனர்.


சிதம்பரம், 

சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சிவகுருநாதன் தலைமை தாங்கி பேசினார்.
 அப்போது அவர் பேசுகையில், இந்தியாவின் இரண்டாவது உண்டு உறைவிடப் பல்கலைக் கழகம் என்ற பாரம்பரியம் கொண்ட, அண்ணாமலை பல்கலைக் கழகத்தை இணைவு பல்கலைக் கழகமாக மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்பது பல்கலைக்கழக பேராசிரியர்கள் கூட்டமைப்பின் நீண்ட கால கோரிக்கை ஆகும்.

முதல்-அமைச்சருக்கு நன்றி

இந்த நிலையில், தி.மு.க. அரசு விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களின் கல்லூரிகளை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தோடு இணைக்க கொள்கை முடிவு எடுத்து அறிவித்துள்ளது. இதற்கு இந்த பல்கலைக்கழகம் மிகவும்  தகுதியான ஒன்றாகும்.

 இந்த முடிவை வரவேற்பதுடன், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் ஆகி யோருக்கு எங்களது கூட்டமைப்பு சார்பில் நன்றிதெரிவித்து கொள்கிறோம். 

விரைவில் துணை வேந்தர்

இந்த கல்லூரிகள் இணைப்பின் மூலம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு விடியல் வந்துவிட்டது. மேலும் துணைவேந்தர் நியமனம் குறித்து முதல்-அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளோம். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளிவரும் என்று நாங்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது ஆஸ்வா தலைவர் சுப்பிரமணியன், அம்பேத்கர் ஆசிரியர் சங்க அசோகன், பொதுச்செயலாளர் செல்வராஜ், ஆஸ்வா கூட்டமைப்பு துணை தலைவர் தனசேகரன், பொதுச் செயலாளர் திருமால்செங்கல்ராயன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story