நல்லம்பள்ளி அருகே கோவில்களில் தொடர் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


நல்லம்பள்ளி அருகே கோவில்களில் தொடர் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 22 July 2021 5:24 PM GMT (Updated: 2021-07-22T22:54:17+05:30)

நல்லம்பள்ளி அருகே கோவில்களில் தொடர் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

நல்லம்பள்ளி:

கோவில்களில் திருட்டு
நல்லம்பள்ளி அருகே ஒட்டப்பட்டி வள்ளுவர் நகரில் ராஜகணபதி மற்றும் ஓம் சக்தி ஆகிய இரு கோவில்கள் உள்ளன. இந்த 2 கோவில்களிலும் நேற்று முன்தினம் வழக்கமாக மூலவர்களுக்கு பூஜைகளை நடத்தி விட்டு பூசாரிகள் கோவிலை பூட்டி விட்டு சென்றனர். இந்த நிலையில் நேற்று காலை இரு கோவில்களையும் திறக்க வந்து பார்த்த போது, ராஜகணபதி கோவில் மற்றும் ஓம் சக்தி ஆகிய கோவில் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு பூசாரிகள் அதிர்ச்சியடைந்தனர். 
இதுகுறித்த தகவலின்பேரில் அதியமான்கோட்டை போலீசார் பூட்டு உடைக்கப்பட்ட இரு கோவில்களிலும் நேரில் வந்து விசாரணை நடத்தினர். இதில் ராஜகணபதி கோவிலில் இருந்த 2 பவுன் எடையுள்ள 4 தங்க தாலிகள், ரூ.10 ஆயிரம் மதிப்பிலான வெள்ளி குத்துவிளக்கு, தீர்த்த பாத்திரங்கள் மற்றும் உண்டியலில் இருந்த ரொக்கம் திருட்டு போனது தெரிய வந்தது. 
இந்த கோவிலில், மூலவருக்கு சாத்தப்படும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளி பொருட்களை மர்ம நபர்களை விட்டுச்சென்றுள்ளனர். இதுதொடர்பாகவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
3 நபர்கள் கைவரிசை
மேலும் அதே பகுதியில் உள்ள ஓம்சக்தி கோவிலில் சாமிக்கு அணிவிக்கப்பட்டு இருந்த தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கைளை பூஜைகள் முடிந்து கோவில் நிர்வாகத்தினர் வீட்டுக்கு கொண்டு சென்று விட்டதால், கோவிலில் எதுவும் திருட்டு போகவில்லை என கூறப்படுகிறது. இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு முனியன்கொட்டாய் கிராமத்தில் உள்ள ஈஸ்வரன் கோவில் பூட்டை உடைத்து தங்க தாலி மற்றும் உண்டியல் பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்துக்குட்பட்ட கிராமங்களில் அடுத்தடுத்து 3 கோவில்களில் தொடர் திருட்டு நடந்துள்ள சம்பவம் கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த திருட்டு சம்பவம் குறித்து கோவிலை சுற்றி குடியிருப்புகளிலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் பார்வையிட்டனர். 
இதில் கோவில்களில் 3 பேர் கொண்ட மர்ம கும்பல் கைவரிசை காட்டியது தெரியவந்துள்ளது. அந்த 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story