மருத்துவக்கல்லூரி பயிற்சி டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டம்

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள் ஊக்க தொகையை உயர்த்தி வழங்கக்கோரி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சிதம்பரம்,
சிதம்பரம் அண்ணாமலைநகரில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு பணி புரியும் பயிற்சி டாக்டர்கள், பல் டாக்டர்கள் 70-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை பணிகளை புறக்கணித்து விட்டு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அமர்ந்து வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சப்-கலெக்டர் பேச்சுவார்த்தை
இதுபற்றி தகவல் அறிந்ததும் சிதம்பரம் சப்-கலெக்டர் மதுபாலன் போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்களை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது டாக்டர்கள் கூறியதாவது:-
ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கடந்த 2013-ம் ஆண்டு அரசுடமையாக்கப்பட்டது. இங்கு பணிபுரியும் பயிற்சி டாக்டர்கள், பல் டாக்டர்கள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் ஊக்கத்தொகை மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. மற்ற அரசு மருத்துவக்கல்லூரிகளில் படிக்கும் பயிற்சி டாக்டர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதந்தோறும் தலா ரூ.21,600 வழங்கப்படுகிறது. எனவே மற்ற கல்லூரிகளை போல எங்களுக்கும் ரூ.21,600 வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.
பரபரப்பு
டாக்டர்களின் கோரிக்கைகளை கனிவுடன் கேட்ட சப்-கலெக்டர் மதுபாலன், உங்களது கோரிக்கை குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதனை ஏற்ற பயிற்சி டாக்டர்கள் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனா்.
போராட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி டாக்டர்கள் கூறுகையில், ஊக்க தொகையை உயர்த்தி வழங்காவிட்டால், தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story