அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.25 லட்சம் மோசடி: முகநூலில் விளம்பரம் செய்து கைவரிசை காட்டிய வாலிபர் கைது


அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.25 லட்சம் மோசடி: முகநூலில் விளம்பரம் செய்து கைவரிசை காட்டிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 24 July 2021 3:07 AM GMT (Updated: 24 July 2021 3:07 AM GMT)

அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி முகநூலில் விளம்பரம் செய்து 70-க்கும் மேற்பட்டோரிடம் ரூ.25 லட்சம் மோசடியில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூரை அடுத்த பள்ளிப்பட்டு அருகே உள்ள அம்மையார்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயநாதன். இவரது மகன் வேதாச்சலம் (வயது 26). இவர் படித்து முடித்து விட்டு வேலை தேடி வந்த நிலையில், சமூக வலைத்தளமான முகநூல் பக்கத்தில் சென்னை கே.கே.நகர் பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ. அரசு ஆஸ்பத்திரியில் பணிக்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரத்தை கண்டார். இதைத்தொடர்ந்து அவர் அந்த விளம்பரத்தில் கொடுக்கப்பட்டிருந்த செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அப்போது, மறுமுனையில் பேசிய நபர் தான் சென்னை மேடவாக்கம், பாபு நகர் 2-வது தெருவை சேர்ந்த பாலாஜி (35) என்றும், ரூ.60 ஆயிரம் செலுத்தினால் கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ. அரசு ஆஸ்பத்திரியில் வேலை வாங்கி தருவதாகவும் கூறியுள்ளார். இதனை உண்மை என்று நம்பிய வேதாச்சலம், பாலாஜியின் வங்கி கணக்கிற்கு செல்போன் பணபரிவர்த்தனை செயலி மூலமாக ரூ.54 ஆயிரத்தை செலுத்தியுள்ளார்.

அந்த பணத்தை பெற்றுக்கொண்ட பாலாஜி கடந்த சில நாட்களுக்கு முன்பு வேதாச்சலத்தின் இ-மெயில் முகவரிக்கு வேலையில் சேருவதற்கான அழைப்பாணையை அனுப்பி இருந்தார். அந்த அழைப்பாணையை எடுத்துக்கொண்டு வேதாச்சலம் அந்த ஆஸ்பத்திரிக்கு சென்று அங்கிருந்த அதிகாரிகளிடம் கொடுத்தார்.

அதை வாங்கிப்பார்த்த ஆஸ்பத்திரி அதிகாரிகள் இது போலியான அழைப்பாணை என்றும், இவ்வாறாக எந்த ஒரு ஆணையையும் ஆஸ்பத்திரி அலுவலகத்திலிருந்து அனுப்பவில்லை என்றும் கூறினர். இதனால் தான் மோசடி செய்யப்பட்டதையறிந்து மனவேதனை அடைந்த வேதாச்சலம், பாலாஜிக்கு போன் செய்தார். ஆனால் அவர் தனது போனை சுவிட்ச்-ஆப் செய்து விட்டு தலைமறைவாகிவிட்டார்.

இதையடுத்து மோசடி செய்து தலைமறைவான பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருவள்ளூரில் உள்ள சைபர் கிரைம் போலீசில் அவர் புகார் செய்தார்.

இதைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் உத்தரவின் பேரில், திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் லில்லி, சைபர் கிரைம் சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ் பிரபாகர் தாஸ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து பாலாஜியை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில், சென்னையில் பதுங்கி இருந்த பாலாஜியை நேற்று கைது செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல் கிடைத்தது. அதில் பாலாஜி கடந்த 2019-ம் ஆண்டில் ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக 18 பேரிடம், இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் வேலை வாங்கி தருவதாக 54 பேரிடமும் போலியான அழைப்பாணைகளை கொடுத்து ரூ.25 லட்சத்திற்கும் மேலாக பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, அவரிடமிருந்து போலி அழைப்பாணை ஆவணங்கள், அரசு முத்திரைகள், முத்திரை தாள்கள், 2 செல்போன்கள் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர், இதையடுத்து பாலாஜியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.

Next Story