ஜெர்மனியில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.5 லட்சம் போதை மாத்திரைகள் பறிமுதல்


ஜெர்மனியில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.5 லட்சம் போதை மாத்திரைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 24 July 2021 10:20 AM IST (Updated: 24 July 2021 10:20 AM IST)
t-max-icont-min-icon

ஜெர்மனியில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.5 லட்சம் போதை மாத்திரைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய தபால் சரக்ககப் பிரிவுக்கு வெளிநாட்டில் இருந்து வரும் பார்சலில் பெரும் அளவில் போதை பொருள் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் தபால் சரக்ககப்பிரிவுக்கு வந்த பார்சல்களை தீவிரமாக சோதனை செய்தனர்.

அப்போது ஜெர்மனி நாட்டில் இருந்து சென்னையில் உள்ள ஒரு முகவரிக்கு பார்சல் வந்திருந்தது. அதில் வாழ்த்து அட்டைகள் இருப்பதாக எழுதி இருந்தது. சந்தேகத்தின்பேரில் அதிகாரிகள் அந்த பார்சலை பிரித்து பார்த்தபோது அதில் 100 பச்சை நிற போதை மாத்திரைகள் கடத்தி வரப்பட்டது தெரிந்தது. ரூ.5 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், சென்னையில் உள்ள முகவரிக்கு சென்று சோதனை செய்தனர். அதில் அந்த முகவரி போலியானது என தெரியவந்தது.

இது தொடர்பாக சுங்க இலாகா அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story