செஞ்சி அருகே, ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்ற பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து ரூ.51 ஆயிரம் அபேஸ் வாலிபர் கைது

செஞ்சி அருகே, ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்ற பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து ரூ.51 ஆயிரம் அபேஸ் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
செஞ்சி,
காஞ்சீபுரம் மாவட்டம் திரிசூலம் சாமி நகர் பகுதியை சேர்ந்தவர் வினோத் குமார். இவரது மனைவி தனலட்சுமி (வயது 37). இவர் கடந்த 6-ந்தேதி விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள நாட்டார் மங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது அங்கு உள்ள ஒரு வங்கி ஏ.டி.எம். மையத்திற்கு அவர் பணம் எடுக்க சென்றார்.
அவருக்கு பணம் எடுக்க தெரியாது என்பதால், அங்கிருந்த ஒரு வாலிபரிடம் கார்டை கொடுத்து பணம் எடுத்து தருமாறு கூறி, ரகசிய குறியீட்டு எண்ணையும் தெரிவித்துள்ளார்.
அந்த நபர், ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க கார்டை செலுத்திவிட்டு, பின்னர் இதில் பணம் இல்லை என்று கூறி, தனலட்சுமியிடம் அந்த கார்டை கொடுத்தார்.
ரூ.51 ஆயிரம் அபேஸ்
சிறிது நேரத்துக்கு பின்னர், தனலட்சுமியின் செல்போனுக்கு வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக தகவல் வந்தது. அதன் பின்னர் தான் வைத்திருந்த கார்டை பார்த்த போது, அது வேறு ஒருவருடையது என்பது தெரியவந்தது.
மேலும், ஏ.டி.எம். மையத்தில் அந்த வாலிபர் தனலட்சுமியின் கார்டை வைத்துக்கொண்டு வேறு ஒரு கார்டை கொடுத்து இருப்பது தெரியவந்தது. மேலும், தனலட்சுமியின் கார்டை பயன்படுத்தி ரூ. 51 ஆயிரத்தை எடுத்து இருப்பது தெரியவந்தது.
வாலிபர் கைது
இதுபற்றி, தனலட்சுமி செஞ்சி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து, துணை போலீஸ் சூப்பிரண்டு இங்கோவன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சக்தி, சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் விசாரித்தனர்.
அதில், ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரித்ததில், செஞ்சி அருகே உள்ள ரெட்டணையை சேர்ந்த சோலை என்பவரது மகன் அன்பு (32) என்பதும், டிரைவராக அவர் வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து அன்புவை போலீசார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story