கர்நாடகத்தில் 283 கிராமங்களை மழை வெள்ளம் சூழ்ந்தது; பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு


கர்நாடகத்தில் 283 கிராமங்களை மழை வெள்ளம் சூழ்ந்தது; பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு
x
தினத்தந்தி 25 July 2021 3:06 AM IST (Updated: 25 July 2021 3:06 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் மாநிலத்தில் 283 கிராமங்களை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கனமழைக்கு பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

பெங்களூரு: கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் மாநிலத்தில் 283 கிராமங்களை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கனமழைக்கு பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

தென்மேற்கு பருவமழை

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக இந்த மழை வடகர்நாடக மாவட்டங்கள், மலைநாடு மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களை புரட்டி போட்டு உள்ளது. யாதகிரி, பெலகாவி, பாகல்கோட்டை, ஹாவேரி, ராய்ச்சூர், தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா, சிக்கமகளூரு, சிவமொக்கா, குடகு ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

போக்குவரத்து துண்டிப்பு

மராட்டியத்தில் பெய்த கனமழை காரணமாக அங்கு உள்ள கொய்னா அணையில் இருந்து கிருஷ்ணா ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கிருஷ்ணா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக கிருஷ்ணா ஆற்றின் கரையையொட்டி அமைந்து உள்ள கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்து உள்ளது.

யாதகிரி மாவட்டத்தில் கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே பசவசாகர் அணை அமைந்து உள்ளது. இந்த அணையில் இருந்து நேற்று வினாடிக்கு 2.50 லட்சம் கனஅடி தண்ணீர் கிருஷ்ணா ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் கிருஷ்ணா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதன்காரணமாக கிருஷ்ணா ஆற்றுப்படுகையில் உள்ள ஹாவேரி, பாகல்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள கிராமங்களை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. 

கிருஷ்ணா ஆற்றில் செல்லும் வெள்ளம் காரணமாக சகாப்புரா தாலுகா எம்.கொல்லூர் கிராமத்தில் கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு உள்ள தரைமட்ட பாலம் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனால் யாதகிரி-தேவதுர்கா இடையே போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு உள்ளது.

ஆயிரம் ஹெக்டேர் கரும்புகள் நாசம்

பாகல்கோட்டை மாவட்டம் முதோல் தாலுகாவில் மிர்ஜி-அர்க்கிமாடி, மகாலிங்கபுரா-யாதவாடா, நந்தகான்-மகாலிங்கபுரா, ஒண்டசோடி-சோரகங்கவா, ஒலேஷ்வரா-மகாலிங்கபுரா ஆகிய கிராமங்களை இணைக்கும் சாலைகள் தண்ணீரில் மூழ்கின. இதனால் இந்த கிராமங்களுக்கு போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு உள்ளது.

மேலும் வடகர்நாடகத்தில் உள்ள தூத்கங்கா, வேதகங்கா, சிரண்யகேசி நதிகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. பெலகாவி மாவட்டம் சிக்கோடி தாலுகாவில் கனமழைக்கு ஆயிரம் ஹெக்டேர் கரும்பு பயிர்கள் நாசமாகி உள்ளது. உக்கேரி தாலுகா கோட்டபாகி கிராமத்தில் உள்ள துர்காதேவி கோவிலை வெள்ளநீர் சூழ்ந்து உள்ளது.

6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

பெலகாவி மாவட்டம் நிப்பானி தாலுகா நிலவதி மலைப்பாதையில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக பெங்களூரு-மும்பை சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. சங்கேஸ்வரா பகுதியில் வெள்ளத்தில் சிக்கி கொண்ட 20 குடும்பத்தினரை பேரிடர் மீட்பு குழுவினர் படகுகள் மூலம் சென்று மீட்டனர். தொடர் கனமழை காரணமாக தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடா, சிவமொக்கா, சிக்கமகளூரு, குடகு ஆகிய 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும், பெலகாவி, தார்வார் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டு உள்ளது. கிருஷ்ணா, காவிரி, துங்கபத்ரா, பீமா, கபிலா உள்ளிட்ட ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் பல்வேறு கிராமங்கள் பாதிக்கப்பட்டு உள்ளது. 

283 கிராமங்கள்...

கர்நாடகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் 45 தாலுகாக்களில் 283 கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இந்த கிராமங்கள் உள்பட மாநிலம் முழுவதும் மொத்தம் 36,498 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 31,360 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் 22,417 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்காக மாநிலம் முழுவதும் 237 நிவாரண முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் உத்தரகன்னடாவில் 7 இடங்களிலும், சிக்கமகளூருவில் 4 இடங்களிலும், குடகில் 3 இடங்களிலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 

இதுவரை கனமழைக்கு 2,600 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. 78 கால்நடைகள் செத்துள்ளன. மேலும் 58 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் மழைநீரில் மூழ்கி நாசமாகி உள்ளன. மாநிலம் முழுவதும் 555 கிலோ மீட்டர் சாலைகள் சேதமடைந்துள்ளன. 3,500 மின்கம்பங்களும், 342 டிரான்ஸ்பார்மர்களும் சாய்ந்து சேதமடைந்துள்ளன. மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி தாலுகா கூடுமல்லிகே பகுதியில் 355 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

5 பேர் சாவு

கனமழைக்கு பெலகாவி மாவட்டம் சிக்கோடி தாலுகா ராமபுரா கிராமத்தை ஹிரா விபூதி என்ற 12 வயது சிறுமி உள்பட 5 பேர் நேற்று இறந்தனர். நேற்று முன்தினம் கர்நாடகத்தில் மழைக்காக 4 பேர் உயிரிழந்தனர். இதனால் சாவு எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

3 பேர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். அவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது. 

Next Story