எடியூரப்பா இன்று பதவி விலகுகிறார்
பா.ஜனதா மேலிட உத்தரவுபடி செயல்படுவேன் என முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று கூறியுள்ளார். இதனால் அவர் இன்று (திங்கட்கிழமை) பதவி விலகுவது உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக கர்நாடக அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவுகிறது.
பெங்களூரு: பா.ஜனதா மேலிட உத்தரவுபடி செயல்படுவேன் என முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று கூறியுள்ளார். இதனால் அவர் இன்று (திங்கட்கிழமை) பதவி விலகுவது உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக கர்நாடக அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவுகிறது.
பா.ஜனதாவில் கட்டாய ஓய்வு
கர்நாடக சட்டசபைக்கு கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை.104 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பா.ஜனதா ஆட்சி அமைத்ததாலும், பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியாததால் அந்த ஆட்சி கவிழ்ந்தது. அதைத்தொடர்ந்து காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி ஆட்சி அமைந்தது. குமாரசாமி முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். இந்த கூட்டணி ஆட்சி 14 மாதங்கள் ஆட்சி புரிந்தது.
இந்த நிலையில் அந்த கூட்டணி கட்சிகளை சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததை அடுத்து குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. அதைத்தொடர்ந்து கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 26-ந் தேதி எடியூரப்பா 4-வது முறையாக முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். 75 வயதை தாண்டிய தலைவர்களுக்கு பா.ஜனதாவில் கட்டாய ஓய்வு அளிக்கப்படுகிறது.
நிபந்தனை விதிக்கப்பட்டது
ஆனால் அதில் இருந்து 76 வயதான எடியூரப்பாவுக்கு விலக்கு அளித்து அவருக்கு முதல்-மந்திரி பதவியை பா.ஜனதா மேலிடம் வழங்கியது. அப்போதே 2 ஆண்டுகள் முடிந்ததும் முதல்-மந்திரி பதவியை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. அந்த நிபந்தனையை எடியூரப்பா ஏற்றுக் கொண்டார். அதன்படி எடியூரப்ப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்று இன்றுடன் (திங்கட்கிழமை) 2 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
கடந்த 16-ந் தேதிக்கு டெல்லி சென்ற எடியூரப்பா, பிரதமர் மோடி, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை நேரில் சந்தித்து பேசினார். அப்போது 2 ஆண்டுகள் நிறைவடைவதால் நிபந்தனைப்படி முதல்-மந்திரி பதவியை விட்டு விலகுமாறு கேட்டுக் கொண்டனர். முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக எடியூரப்பாவும் உறுதி அளித்துவிட்டு வந்தார்.
2 ஆண்டுகள் சாதனை
பா.ஜனதா மேலிடத்திடம் இருந்து அதிகாரபூர்வமான தகவல் வந்ததும், முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக எடியூரப்பா ஏற்கனவே அறிவித்தார். இந்த நிலையில் எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்று இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்த 2 ஆண்டுகள் சாதனையை கொண்டாடும் விதமாக நிகழ்ச்சி ஒன்றுக்கு பெங்களூருவில் கர்நாடக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதில் எடியூரப்பா கலந்து கொண்டு பேசுகிறார்.
இந்த நிகழ்ச்சியில் எடியூரப்பா ராஜினாமா குறித்து அறிவித்துவிட்டு, அதன் பிறகு கவர்னரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்குவார் என்று தகவல் வழங்கியுள்ளது.
இதுகுறித்து பெலகாவியில் நேற்று எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஊழல் குறித்து விசாரணை
பெலகாவியில் அதிக மழை பெய்துள்ளதால் பல பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ளன. நான் அந்த பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளேன். இங்கு தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பெண்கள்-குழந்தைகள் நலத்துறை மந்திரி சசிகலா ஜோலே மீதான முட்டை கொள்முதல் ஊழல் குறித்து விசாரணை நடத்தப்படும்.
நான் பதவி விலகுவது தொடர்பாக கட்சி மேலிடம் இன்று (நேற்று) மாலைக்குள் தகவலை அனுப்பும். அந்த தகவல் உங்களுக்கும் தெரிந்துவிடும். ஆனால் பிரதமர் மோடி உள்பட கட்சி மேலிட தலைவர் என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அதனால் அவர்கள் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். நான் கட்சி மேலிடத்தின் முடிவை ஏற்றுக் கொள்வேன். நான் கட்சி மேலிடத்தின் முடிவை மீற மாட்டேன்.
குறை இல்லை
எனக்கு எந்த குறையும் இல்லை. திருப்தியுடன் உள்ளேன். பா.ஜனதாவில் அனைவரும் கட்சி மேலிடத்தின் முடிவை கேட்பதாக சி.டி.ரவி எம்.எல்.ஏ. கூறியுள்ளார். அது 100 சதவீதம் உண்மை. கட்சி மேலிடம் என்ன சொல்கிறதோ அதன்படி செயல்படுவேன். நான் நாளைக்கு (அதாவது இன்று) உத்தரகன்னடா மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஆய்வு செய்ய உள்ளேன்.
எனக்கு ஆதரவாக மடாதிபதிகள் மாநாடு நடத்துவது அவசியமற்றது. பிரதமர் மோடி, ஜே.பி.நட்டா, அமித்ஷா ஆகியோர் மீது நம்பிக்கை உள்ளது. தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு முதல்-மந்திரி வழங்குவது என்று நான் எந்த முடிவும் எடுக்க முடியாது. அதுகுறித்து பா.ஜனதா மேலிடம் தான் முடிவு எடுக்க வேண்டும். முதலில் அவர்கள் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதை பார்ப்போம்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
மடாதிபதிகள் வலியுறுத்தல்
இதற்கிடையே எடியூரப்பாவை முதல்-மந்திரியில் மாற்றக் கூடாது என்பது வலியுறுத்தியும், அவரையே இன்னும் 2 ஆண்டுகளுக்கு முதல்-மந்திரியாக தொடர் வலியுறுத்தியும் அவரது சமூகமான வீரசைவ-லிங்காயத் சமுதாய மடாதிபதிகள் பெங்களூருவில் நேற்று கூடி ஆலோசித்தனர். மேலும் எடியூரப்பாவை நீக்கக் கூடாது என அவர்கள் தீர்மானம் நிறைவேற்றினர்.
Related Tags :
Next Story