கைத்தறி நெசவாளர்களுக்கு 500 யூனிட் இலவச மின்சாரம் வழங்க கைத்தறி நெசவாளர் சங்கத்தினர் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு


கைத்தறி நெசவாளர்களுக்கு 500 யூனிட் இலவச மின்சாரம் வழங்க  கைத்தறி நெசவாளர் சங்கத்தினர் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு
x
தினத்தந்தி 26 July 2021 3:31 PM GMT (Updated: 26 July 2021 3:31 PM GMT)

கைத்தறி நெசவாளர்களுக்கு 500 யூனிட் இலவச மின்சாரம் வழங்க கைத்தறி நெசவாளர் சங்கத்தினர் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு

திருப்பூர்,
கைத்தறி நெசவாளர்களுக்கு 500 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று கைத்தறி நெசவாளர் சங்கத்தினர் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
இலவச வீட்டு மனை பட்டா
 திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு பொதுமக்கள் மனுக்களுடன் அதிக அளவில் வந்தனர். இதற்காக குறைதீர்ப்பு கூட்ட அரங்கம் முன்பு ஊழியர்கள் நியமிக்கப்பட்டு, பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை பெற்று கணினியில் பதிவேற்றம் செய்து ரசீது வழங்கப்பட்டது. இந்த முகாமில் திருப்பூர் மாவட்ட கைத்தறி நெசவாளர் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
 கூட்டுறவு சங்கங்களில் உள்ள சேலைகளை கோ-ஆப்டெக்ஸ் மூலமாக உடனே கொள்முதல் செய்ய வேண்டும். நெய்வதற்கு பாவு நூல் உடனடியாக வழங்க வேண்டும். விலைவாசி உயர்வுக்கு ஏற்ப கூலியை உயர்த்தி வழங்க வேண்டும்.  கைத்தறி நெசவாளர்களுக்கு தறிக்கூடத்துடன் கூடிய பசுமை வீடு கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். கைத்தறி நெசவாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் 200 யூனிட் என்பது போதுமானதாக இல்லை. அதை 500 யூனிட் ஆக மாற்றி வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறினார்கள்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் அளித்த மனுவில், ‘கர்நாடக மாநிலம் மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு மேகதாதுவில் புதிதாக அணையை கட்டக்கூடாது.  இதற்கு பிரதமர் மோடி உரிய நடவடிக்கை எடுத்து தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளனர்.
திருமுருகன்பூண்டி பேருராட்சி தேவராயம்பாளையம் பகுதியை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், ‘எங்களுக்கு அரசின் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கி உதவ வேண்டும்' என்று கூறியுள்ளனர்.
கிரையப்பத்திரம்
திருப்பூர்  புதுப்பாளையம் டி.கே.எஸ்.நகர் பகுதியை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், ‘எங்கள் பகுதியில் தனியார் நிறுவனத்திடம் தவணை முறையில் பணம் செலுத்தி, வீடு கட்டிக்கொடுத்தார்கள். 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். 7 ஆண்டுகளுக்கும் மேலாகியும் எங்களுடைய வீட்டுக்கு கிரையப்பத்திரம் வழங்கப்படவில்லை. 4 வீடுகளுக்கு சேர்த்து ஒரு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது மின்கட்டணம் அதிகமாக வருகிறது. அதுபோல் குடிநீர் வசதியில்லை.
இதுகுறித்து தனியார் நிறுவனத்தினரிடம் தெரிவித்தும் இதுவரை கிரையம் செய்து கொடுக்காமல் இருக்கிறார்கள். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளனர்.
கொடுவாய் வெள்ளியம்பாளையம் பகுதியை சேர்ந்த இந்துமதி (வயது 30) என்பவர் தனது குடும்பத்துடன் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். பின்னர் அவர் அளித்த மனுவில், ‘எனது கணவர் பலசரக்கு கடை வைத்து நடத்தி வருகிறார். எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். எனது கணவர் தற்போது என்னையும், எனது குழந்தைகளையும் சித்ரவதை செய்கிறார். இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனது 40 பவுன் நகை, பணம் ஆகியவற்றை எனது கணவர் பறித்துவைத்துள்ளார். இதற்கு மாமனார் துணையாக உள்ளார். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.
நேற்று நடந்தமுகாமில் தொலைபேசி மூலம் 75 மனுக்கள் பெறப்பட்டது. அதுபோல் 271 பேர் கலெக்டர் அலுவலகத்தில் குறைகளை மனுவாக தெரிவித்துள்ளனர்.

Next Story