தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 July 2021 3:18 PM GMT (Updated: 27 July 2021 3:18 PM GMT)

மேகதாதுவில் கர்நாடகஅரசு அணை கட்டுவதை தடுக்க கோரிக்கை தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் பாலசுந்தரம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் வீர.மோகன், மாநிலக்குழு உறுப்பினர் தர்மராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை மாநில பொதுச் செயலாளர் டாக்டர் துரைமாணிக்கம் தொடங்கி வைத்து பேசினார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநகர செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் தில்லைவனம், மாவட்ட துணைச் செயலாளர் துரை.மதிவாணன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பக்கிரிசாமி, மீனவர் சங்க மாவட்ட செயலாளர் காளிதாஸ் ஆகியோர் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில், தமிழக அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் மீறி கர்நாடகஅரசு மேகதாதுவில் அணை கட்டுவதை கண்டிப்பதுடன், இந்த முயற்சியை மத்தியஅரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் முத்து.உத்திராபதி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் தேசிய குழு உறுப்பினர் பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் மாவட்டக்குழு உறுப்பினர் சவுந்தரராஜன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன் நிர்வாகிகள் 10 பேர், மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

Next Story