மாவட்ட செய்திகள்

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா + "||" + Public Dharna at the Panchayat Union Office

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா
சாலை வசதி கேட்டு, திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்:

திண்டுக்கல் அருகே உள்ள பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி அனுமந்தநகர் புதுத்தெருவில் உள்ள 2 சாலைகள் சீரமைப்பு பணி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தொடங்கியது.

 முதற்கட்டமாக குண்டும், குழியுமாக இருக்கும் சாலைகளை சமன்படுத்தும் பணி நடந்தது. ஆனால் அதன் பின்னர் தார்சாலை அமைக்காமல் அப்படியே விடப்பட்டதாக தெரிகிறது. 

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அப்பகுதி பொதுமக்கள் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், நேற்று திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

 இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) கிருஷ்ணன் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தங்கள் பகுதியில் கடந்த 2 மாதங்களாக தார்சாலை அமைக்கப்படவில்லை. தெருவிளக்குகள் முறையாக எரிவதில்லை. குடிநீர் வசதி இல்லை. 

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டோம். முதல்-அமைச்சர் தனிப்பிரிவுக்கு மனு கொடுத்தோம்.
ஆனால் இதுவரை எங்கள் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை என்று பொதுமக்கள் தெரிவித்தனர். 

இதனையடுத்து சாலை அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என்றும், தெருவிளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதி அளித்தார். அதன்பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.