சிறுவர்களை உற்சாகப்படுத்த தயாராகும் சப்பரங்கள்


சிறுவர்களை உற்சாகப்படுத்த தயாராகும்  சப்பரங்கள்
x
தினத்தந்தி 1 Aug 2021 2:07 AM IST (Updated: 1 Aug 2021 2:07 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணத்தில், ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு சிறுவர்களை உற்சாகப்படுத்துவதற்காக சப்பரங்கள் தயாராகி வருகின்றன.

கும்பகோணம்:
கும்பகோணத்தில், ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு சிறுவர்களை உற்சாகப்படுத்துவதற்காக சப்பரங்கள் தயாராகி வருகின்றன. 
ஆடிபெருக்கு விழா
ஆடிமாதம் என்பது அம்மனுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் பெண்கள் விரதம் இருந்து அம்மன் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்வார்கள். ஆடி மாத வழிபாடு மூலமாக சுமங்கலி பாக்கியம், குழந்தை பாக்கியம் கிடைப்பதாக ஐதீகம். 
ஆடி மாதத்தின் 18-ம் நாள் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ஆற்றங்கரையில் பெண்கள் சிறப்பு வழிபாடு செய்வார்கள். காவிரி டெல்டா மாவட்டங்கள் முழுவதும் ஆடிப்பெருக்கு விழா உற்சாகமாக கொண்டாடப்படுவது வழக்கம். 
திருவிழா கோலம்
ஆடிபெருக்கு விழா நாளில் கும்பகோணம் காவிரி ஆற்றில் உள்ள படித்துறைகளில் சுமங்கலிப்பெண்களும், கன்னிப்பெண்களும் ஒன்றுகூடி காவிரி தாய்க்கு இனிப்பு, பழங்கள் படைத்து வழிபாடு செய்து, மஞ்சள் கயிற்றை அணிந்து கொள்வது வழக்கம்.  இதனால் ஆடிப்பெருக்கு நாளில் காவிரி படித்துறைகளில் பெண்கள் கூட்டம் அலைமோதும். காவிரி படித்துறைகள் திருவிழா கோலம் பூண்டிருக்கும். இந்த ஆண்டு வருகிற 3-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. 
சிறுவர்களின் உற்சாகம்
ஆடிப்பெருக்கு விழா நாளில் சிறுவர்கள் சிறிய சப்பரங்களை ஆற்றங்கரைக்கு உற்சாகமாக இழுத்து செல்வார்கள். அந்த சப்பரத்தில் காவிரி தாயின் படம் இடம் பெற்றிருக்கும். சப்பரத்துக்கு தீபம் காட்டி வழிபாடுகளும் நடைபெறும். 
அதைத்தொடர்ந்து ஆற்றங்கரையில் இருந்து சப்பரங்களை சிறுவர்கள் மீண்டும் தங்களுடைய வீடுகளுக்கு இழுத்து செல்வார்கள். இப்படி செய்வது காவிரி தாயை வீட்டுக்கு அழைத்து வந்ததாக ஐதீகம். காவிரியில் நீராடி காவிரி அம்மன் உள்ள சப்பரம் வீட்டுக்கு வந்தவுடன் ஒவ்வொருவரும் தங்களுடைய வீட்டில் உள்ள பழங்கள், காப்பரிசி உள்ளிட்டவற்றை அருகில் உள்ள வீடுகளுக்கு வழங்கி மகிழ்வார்கள். 
பணி மும்முரம்
இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழா நெருங்கி வருவதை முன்னிட்டு கும்பகோணம் பகுதியில் சிறுவர்களை உற்சாகப்படுத்துவதற்காக சப்பரங்கள் தயாராகி வருகின்றன. 
கும்பகோணம் அருகே மூப்பக்கோவில் உள்ளிட்ட இடங்களில் மரத்தாலான சிறிய சப்பரங்களை தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

Next Story