பணி நீக்கம் செய்யப்பட்டதால் அம்மா உணவக பணியாளர்கள் 2-வது நாளாக தர்ணா
பணி நீக்கம் செய்யப்பட்டதால் அம்மா உணவக பணியாளர்கள் 2-வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அரசு மருத்துவமனை வளாகம், பூ மார்க்கெட் ஆகிய 2 இடங்களில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த 2 அம்மா உணவகங்களிலும் தலா 12 பெண்கள் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் அவர்கள் அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும், அவர்களுக்கு பதிலாக புதிய பணியாளர்கள் அங்கு பணியமர்த்தப்படுவார்கள் என்றும் நேற்று முன்தினம் தகவல் பரவியது.
இதனால் அதிர்ச்சியடைந்த அம்மா உணவக பணியாளர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனை அருகே, திருச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் அம்மா உணவக பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகத்துக்கு சென்று அங்கு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இரவு 8.30 மணியளவில் போலீசார் வந்து அவர்களை வெளியேற்றினர். மேலும் 2 அம்மா உணவகங்கள் முன்பும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
2-வது நாளாக....
இந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் திண்டுக்கல் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகம் முன்பு திரண்ட பணியாளர்கள் 2-வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசாரிடம் உணவக பணியாளர்கள் வாக்குவாதம் செய்தனர். மேலும் அங்கிருந்து கலைந்து செல்லாத பணியாளர்கள், அம்மா உணவகத்தை திறந்து வழக்கம் போல் தங்கள் பணிகளை செய்ய தொடங்கினர். இதற்கிடையே புதிதாக நியமிக்கப்பட்ட பணியாளர்களும் அங்கு வந்தனர். அவர்களை பணி செய்ய முன்னாள் பணியாளர்கள் அனுமதிக்கவில்லை. இந்த நிலையில் சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது உங்கள் பணி முடித்து வைக்கப்பட்டுவிட்டது. இனி நீங்கள் தொடர்ந்து வேலை செய்தாலும் சம்பளம் வழங்கப்பட மாட்டாது. புதிதாக நியமிக்கப்பட்டவர்களுக்கே சம்பளம் வழங்கப்படும் என்றனர். இதையடுத்து பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதையடுத்து புதிதாக நியமிக்கப்பட்ட பணியாளர்கள் தங்களது பணிகளை தொடங்கினர். பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் இன்று (திங்கட்கிழமை) தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக்கோரி கலெக்டரிடம் மனு அளிக்க உள்ளனர்.
Related Tags :
Next Story