அனுமதியின்றி கட்டப்பட்ட கிறிஸ்தவ ஆலயம் இடித்து அகற்றம் எதிர்ப்பு தெரிவித்த 50 பேர் கைது

மூங்கில்துறைப்பட்டு அருகே அனுமதியின்றி கட்டப்பட்ட கிறிஸ்தவ ஆலயம் இடித்து அகற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த 50 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
மூங்கில்துறைப்பட்டு
கிறிஸ்தவ ஆலயம்
மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள பொருவளூர் மோடங்கல் மலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனுமதியின்றி ஏசுநாதர் சிலையும் 2 இடங்களில் சிறிய கிறிஸ்தவ ஆலயங்களும் கட்டப்பட்டன. ஆனால் இதற்கு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து சங்கராபுரம் தாசில்தார் சையத் காதர், திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் இருதரப்பினரையும் அழைத்து சமாதான கூட்டம் நடத்தினர். அதில் புதிதாக கட்டப்பட்டுள்ள தேவாலயங்களை கட்டியவர்கள் குறித்த காலத்துக்குள் அவற்றை அகற்ற வேண்டும் என தெரிவித்து இருந்தனர்.
இடித்து அகற்றம்
ஆனால் குறிப்பி்ட்ட காலத்துக்குள் கிறிஸ்தவ ஆலயம் அகற்றப்படாததால் கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர்(பொறுப்பு) சரவணன் தலைமையிலான வருவாய் த் துறையினர் மோடங்கல் மலையில் உள்ள ஏசு நாதர் சிலை மற்றும் அப்பகுதியில் கட்டப்பட்டிருந்த சிறு தேவாலயங்களை அகற்ற முடிவு செய்தனர்.
இதையடுத்து நேற்று காலை கள்ளக்குறிச்சி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஜய்கார்த்திக்ராஜ் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதைத் தொடர்ந்து அனுமதியின்றி கட்டப்பட்ட கிறிஸ்தவ ஆலயத்தை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றும் பணியை வருவாய்த்துறையினா் மேற்கொண்டனர்.
50 பேர் கைது
இதையறிந்து அங்கு வந்த 50-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் தேவாலயத்தை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். பின்னர் பணியை தடுக்க முயன்ற அவர்களை அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் கைது செய்து அங்குள்ள தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர். பின்னர் மாலையில் அனைவரையும் விடுவித்தனர்.
முன்னதாக கிறிஸ்தவஆலயங்கள் இடித்து அகற்றப்படும் போது யாரேனும் மது அருந்திவிட்டு தொல்லை தரக் கூடும் என்பதால் அந்த பகுதியில் உள்ள 2 டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன.
அனுமதியின்றி கட்டப்பட்ட கிறிஸ்தவ ஆலயத்தை இடித்து அப்புறப்படு்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த 50 பேரை போலீசார் கைது செய்த சம்பவத்தால் மூங்கில்துறைப்பட்டு பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story