தரிசனத்துக்கு தடை எதிரொலி பழனி அடிவாரத்தில் பக்தர்கள் வழிபாடு


தரிசனத்துக்கு தடை எதிரொலி பழனி அடிவாரத்தில் பக்தர்கள் வழிபாடு
x
தினத்தந்தி 3 Aug 2021 12:26 AM IST (Updated: 3 Aug 2021 12:26 AM IST)
t-max-icont-min-icon

பழனி மலைக்கோவிலில் முருகன் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் அடிவாரத்தில் பக்தர்கள் வழிபாடு செய்தனர்.


பழனி, ஆக.3-
கொரோனா 3-ம் அலையை தடுக்க தமிழகம் முழுவதும் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக நெரிசலுக்கு வாய்ப்புள்ள இடங்களில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் ஆடி கிருத்திகை, ஆடிப்பெருக்கு ஆகிய நாட்களான நேற்றும், இன்றும் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனத்துக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.இதனால் ஆடிக்கிருத்திகையான நேற்று பழனி கோவில் பகுதி பக்தர்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. பக்தர்கள் அடிவாரத்தில் உள்ள பாதவிநாயகர் கோவில், திருஆவினன்குடி கோவில் ஆகிய கோவில்களின் முன் பகுதியில் தேங்காய் உடைத்தும், கற்பூரம் ஏற்றியும் வழிபாடு செய்தனர். மேலும் வெளியூரில் இருந்து வந்த பக்தர்கள் சிலர் மலர் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அவ்வாறு வந்த பக்தர்கள் பாதவிநாயகர் கோவில் முன்பு வழிபட்டு சென்றனர்.
இந்நிலையில் பக்தர்கள் வருகை இல்லாததால் இடும்பன் கோவில், பழனி முருகன் கோவில் மற்றும் அதன் உபகோவில்களில் நேற்று தூய்மை பணிகள் நடந்தது. அதன்படி கோவிலின் உள் மற்றும் வெளிப்பிரகாரம், மண்டபங்கள் ஆகிய இடங்களில் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யப்பட்டது.


Next Story