புதுச்சேரியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா
புதுச்சேரி அரசு சார்பில் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
பாகூர்,
பாகூர் தொகுதி மணப்பட்டு கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் நேற்று நடந்த விழாவில், அரசு செயலர் உதயகுமார் வரவேற்றார். முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மரக்கன்றுகளை நட்டனர்.
விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-
புதுச்சேரியில் 75 ஆயிரம் மரக்கன்றுகள் மட்டுமல்லாது, மாநிலம் முழுவதும் பல லட்சம் மரங்களை நட்டு பசுமையாக மாற்றவேண்டும்.
அதிகாரபகிர்வு குறித்து இங்கு பேசினார்கள். நான் என்றைக்குமே அதிகாரத்தை கையில் எடுத்தது இல்லை என்பதை புதுச்சேரி மக்கள் நன்கு அறிவார்கள். என்னை பொறுத்தவரை அன்பு பகிர்வு இருக்குமே தவிர, அதிகார பகிர்வு இல்லவே இல்லை.
சட்டமன்ற உறுப்பினர்களிடம் தொடர்பு கொண்டு தடுப்பூசி குறித்து தொகுதி மக்களிடம் முன்னெடுத்து செல்லுங்கள் என்றேன். அதுபோல், தான் இப்போதும், மரக்கன்றுகளை நட்டு, உங்கள் தொகுதியை பசுமையாக்கிட வேண்டும். அரசாங்கம் மக்களுக்கு நல்லது செய்யக் கூடிய எந்த கருத்துகள் முன்வைக்கப்படாலும், அதற்கு நான் துணை நிற்பேன்.
இவ்வாறு கவர்னர் தமிழிசை பேசினார்.
அப்போது முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு, கவர்னர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.
விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-
நமது மாநிலத்தில் பசுமையாக மாற்ற நிறைய இடங்கள் உள்ளது. இதில், 75 ஆயிரம் மரம் மட்டுமின்றி, லட்சக்கணக்கான மரங்களை நடுவோம். இதன் மூலமாக பசுமையான புதுச்சேரியை உருவாக்குவோம்.
புதுச்சேரி மாநிலத்தை மேலும் சிறந்த மாநிலமாக மாற்றி எல்லோரும் விரும்பும் வளமான மாநிலமாக உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
இந்த பகுதி சுற்றுலாதலத்திற்கு தகுதியான இடம். சுற்றுலாவை மேம்படுத்த கூடிய நல்ல சூழல் இங்குள்ளது. வல்லுனர்களிடம் ஆலோசித்து சுற்றுலா திட்டங்களை கொண்டு வருவோம். இதற்கு, உள்ளூர் மக்கள் ஒத்துழைக்க வேண்டும். இங்கு, மீன்பிடி துறைமுக திட்ட பணி கிடப்பில் உள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பு இன்றி, அதனை செயல்படுத்துவது குறித்து அரசாங்கம் கவனத்தில் எடுத்துக்கொள்ளும்.
புதுச்சேரியில் அனைத்து துறைகளிலும் 10 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ளன. இதனால் எந்த துறையும் சிறப்பாக செயல்படாத சூழ்நிலை இருந்து வருகிறது. அதிகாரிகளிடம் கேட்டால் அவர்கள் ஆள் பற்றாக்குறை என்று கூறி விடுகின்றனர்.
வேலைவாய்ப்பின்றி புதுச்சேரி இளைஞர்கள் கஷ்டப்படுகிறார்கள். இதனைப் போக்க விரைவில் அரசுத்துறையில் உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் அரசின் திட்டங்களை விரைவில் செயல்படுத்த முடியும்.
சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத, தனியார் தொழிற்சாலைகள், புதுச்சேரியில் கொண்டு வருவதற்கான சூழலை இந்த அரசு உருவாக்கும். இது தொடர்பாக, தொழில் துறை வல்லுனர்களிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு, கவர்னர் முழு ஒத்துழைப்பு அளிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.
கடந்த ஆட்சியில், அதிகாரப்போட்டி என்பது வெட்ட வெளிச்சமாக தெரிந்தது. அது இப்போது, மாறி உள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவைக்கு என்னென்ன அதிகாரங்கள் தேவை என்பதை கவர்னர் நன்கு அறிவார். கவர் னரின் முழு ஒத்துழைப்போடு, புதுச்சேரி மாநிலத்தை தொழில் வளம் மிகுந்த பசுமையான மாநிலமாக கொண்டு வருவோம்.
இவ்வாறு ரங்கசாமி பேசினார்.
விழாவில், சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ.ஜெயக்குமார், சாய் ஜெ சரவணன் குமார், எம்.எல்.ஏ.க்கள் செந்தில்குமார், பாஸ்கர், தலைமை செயலர் அஸ்வனிகுமார் மற்றும் வனத்துறை, வேளாண் துறை, பொதுப்பணித்துறை செயலர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
விழாவில், அரசு அதிகாரிகள், மாணவர்கள், தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு மணப்பட்டு வனப்பகுதியில் 13,250 மர கன்றுகளை நட்டனர்.
இதனை தொடர்ந்து நேற்று ஒரே நாளில் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன. முடிவில் வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலர் ஸ்மித்தா ராணி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story