செல்போனுக்கு சார்ஜ் போடுவதில் தகராறு; வடமாநில வாலிபர் கொலை


செல்போனுக்கு சார்ஜ் போடுவதில் தகராறு; வடமாநில வாலிபர் கொலை
x
தினத்தந்தி 4 Aug 2021 3:04 AM IST (Updated: 4 Aug 2021 3:04 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் செல்போனுக்கு சார்ஜ் போடும் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் உருட்டு கட்டையால் தாக்கி வடமாநில வாலிபர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மத்திய பிரதேச வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரு: பெங்களூருவில் செல்போனுக்கு சார்ஜ் போடும் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் உருட்டு கட்டையால் தாக்கி வடமாநில வாலிபர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மத்திய பிரதேச வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சார்ஜ் போடுவதற்கு தகராறு

பெங்களூரு ராஜாஜிநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் அனில் (வயது 27). இவர், மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். பெங்களூருவில் அவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அனிலுடன், மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஆகாஷ் (29) என்பவரும் தங்கி இருந்தார். அவருடன் கட்டிட வேலை செய்து வந்துள்ளார்.

  இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்ததால் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இந்த நிலையில், அனிலும், ஆகாசும் சேர்ந்து மதுஅருந்தியதாக தெரிகிறது. குடிபோதையில் 2 பேரும் வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது தங்களது செல்போனை 2 பேரும் சார்ஜ் போடுவதற்காக முயன்றுள்ளனர். ஆனால் அங்கு ஒரே நேரத்தில் ஒரு செல்போனுக்கு மட்டுமே சார்ஜ் போடும் வசதி வீட்டில் இருந்தது.

தொழிலாளி கொலை

 இந்த விவகாரம் தொடர்பாக அனிலுக்கும், ஆகாசுக்கும் இடையே வாக்குவாதம் உண்டானது. அப்போது ஆகாசை அனில் தாக்கியதாக தொிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆகாஷ் வீட்டில் கிடந்த உருட்டு கட்டையை எடுத்து, அனிலை பலமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அனிலை ஆஸ்பத்திரியில் ஆகாஷ் அனுமதித்தார்.

 அங்கு அனிலுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்து விட்டார். தகவல் அறிந்ததும் ராஜாஜிநகர் போலீசார் சம்பவ இடத்திற்கும், ஆஸ்பத்திரிக்கு சென்றும் விசாரணை நடத்தினார்கள். அப்போது குடிபோதையில் செல்போனுக்கு சார்ஜ் போடும் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து ராஜாஜிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆகாசை கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story